உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பயங்கரங்களை சில அரபுத் தலைவர்கள் புறக்கணிக்கின்றனர் என உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரபு லீக் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குற்றம்சுமத்தினார்.
இந்த உச்சிமாநாட்டில் ஆச்சரியகரமாக, உக்ரேனிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கியும் கலந்துகொண்டார்.
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னர் மத்திய கிழக்குக்கு ஸெலென்ஸ்கி விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும்.. ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின்
பிரெஞ்சு அரச விமானமொன்றின் மூலம் போலந்திலிருந்து சவூதி அரேபியாவுக்கு ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பயணித்தார் என சவூதி அரேபியாவுக்கான பிரெஞ்சு தூதுவர் தெரிவித்துள்ளார்.
அரபு லீக் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவினால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரைமியாவிலுள்ள முஸ்லிம்களை இந்த யுத்தம் எந்தளவு பாதித்துள்ளது என விளக்கினார்.
“ரஷ்ய ஆக்கிரமிப்பினால் முதலில் கிரைமியாவே பாதிக்கப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட கிரைமியாவில் இதுவரை அடக்குமுறைக்குள்ளான பெரும்பாலானோர் முஸ்லிம்கள்” என ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கூறினார்.
“துரதிஷ்டவசமாக உலகிலும், இங்கும், உங்கள் மத்தியிலும் உள்ள சிலர் சட்டவிரோத இணைப்புகளை பாராதவர்களைப் போல் உள்ளனர்'” என அவர் கூறியதுடன் இவ்விடயத்தில் நேர்மையான பார்வை வேண்டும் என வலியுறுத்தினார்.
உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அளிக்கும் ஆதரவுக்காக சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுக்கு; ஜனாதிபதி ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். ‘ரஷ்யாவின் சிறைக் கூண்டுகளிலிருந்து’, மக்களை பாதுகாப் பதில் ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.