பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கவர்னரிடம் மனு அளித்தனர்.
அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய மரண விவகாரத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கவர்னரை சந்தித்தபின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
– அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும். விஷச்சாராய மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பு இல்லை.
அரசியலமைப்பு சட்டத்தை அமைச்சர் மீறும்போது, சட்டத்தை காக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு. தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை; கைகள் கட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து முதல்வரிடம் விரைவில் வெள்ளை அறிக்கை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.