போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான கடந்த 14 வருடங்களில் அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் காலந்தாழ்த்திவிட்டு, அதனை ஏனைய சர்வதேச நாடுகள் வலியுறுத்திக் கூறியவுடன் கோபப்படுவதில் அர்த்தமில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ அல்லது சர்வதேச நீதிமன்றத்துக்கோ கொண்டுசெல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க கனடா முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மனித உரிமைகள், சமாதானம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை விட்டுக்கொடுத்துவிட முடியாது என்பதற்கான நினைவூட்டல்களாக போரினால் பாதிக்கப்பட்ட கனேடிய தமிழர்களின் கதைகள் உள்ளன.
எனவே, போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் இலங்கையர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய செயற்பாடுகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.
கனேடிய பிரதமரின் கருத்தை கடுமையாக கண்டித்து நிராகரிப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எவ்வித ஆதாரங்களுமின்றி முன்வைக்கப்படும் ‘இனப்படுகொலை’ தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இலங்கையர்களை துருவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பொறுப்புக்கூறல் விவகாரத்தை பொறுத்தமட்டில் இதுவரையில் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்றும், அவ்வாறு முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கை நடுநிலையுடன் இருக்கவேண்டுமானால், அது சர்வதேச பொறிமுறையாக அமையவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான கடந்த 14 வருடங்களில் அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் காலந்தாழ்த்திவிட்டு, அதனை ஏனைய சர்வதேச நாடுகள் வலியுறுத்திக் கூறியவுடன் கோபப்படுவதில் அர்த்தமில்லை என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னின்று செயற்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று எனவும், கனடா மாத்திரமன்றி ஏனைய சர்வதேச நாடுகளும் இவ்விடயத்தை வலியுறுத்தி வருகின்றன என்றும் குறிப்பிட்ட அவர், எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச சமூகம் நிச்சியமாக அழுத்தம் பிரயோகிக்கும் எனவும் கூறினார்.
அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை கனடா ஏற்றுக்கொண்டமையை வரவேற்பதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் என்பது கடந்த 12 வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே முடங்கிப்போயிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, இவ்விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ அல்லது சர்வதேச நீதிமன்றத்துக்கோ கொண்டுசெல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க கனடா முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுமாத்திரமன்றி, இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்று முடிந்த விடயங்கள் தொடர்பில் கனடா கவலையை வெளிப்படுத்தியுள்ளமை ஆறுதலளிக்கின்ற போதிலும், தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்கு எதிராக கனடா முன்நின்று செயற்படவேண்டும் என்றும் கஜேந்திரன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.