இனப்பாகுபாடும் இனஒதுக்கலுமே எழுபது ஆண்டுகளில் இனப்படுகொலையானது!

188 0

இனப்பாகுபாடாகவும் இனஒதுக்கலாகவும் சிங்கள தேசம் தமிழர் மீது காட்டி வந்த பாரபட்சமும், நிலப்பறிப்பும் பின்னர் இனரீதியான தாக்குதலாகி, இறுதியில் சிங்கள அரச இயந்திரங்களால் தமிழினப் படுகொலையாக மாற்றம் பெற்றது. இதனை இனப்படுகொலை என அழுத்திக் கூறும் குரல்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சர்வதேச அரங்கில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. 

முள்ளிவாய்க்கால் தமிழின பேரழிப்பின் பதினான்காவது ஆண்டு நினைவேந்தல் வழமையான உணர்வுபூர்வ நிகழ்வு என்பதற்கும் அப்பால் சர்வதேச மட்டத்தில் அரசியல் ரீதியாக சிறு அசைவையும் காட்டியுள்ளது.

2009ல் இரத்தத்தில் தோய்ந்த மண்ணை மக்கள் கண்ணீரால் நனைத்து, அந்த நிலத்தின்மீது அழுதும் உருண்டும் தொழுதும் தங்கள் வலியை தீர்த்துக் கொள்ள முனைந்ததை நினைவேந்தல் நாளில் காண முடிந்தது.

தாயகத்தின் நினைவேந்தல்களுக்கு நிகராக தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு இங்கே பதிவு செய்யப்பட வேண்டியது. கடந்த வருடம் காலிமுகத்திடலில் அரகலய போராட்டம் நடந்தவேளை இன மத பேதமின்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

இம்முறை தலைநகரில் பொரளையிலுள்ள கனத்தை பொதுமயான சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் சிங்கள் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.  காணாமலாக்கப்பட்ட மூத்த ஊடகவியலாளர் பிரகித் எக்னலியகொடவின் பாரியார் சந்தியா எக்னலியகொட மற்றும் சிங்கள இளையோர் பங்குபற்றிய இந்நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை வா.சக்திவேலும் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வை புலிகளை நினைவு கூரும் வைபவம் என்று கூறியவாறு குழப்புவதற்கு பௌத்த அமைப்புகளின் சிலர்  முயன்றனர். அவர்களுக்கு இயைவாக பொலிசாரும் சேர்ந்து இதனை நிறுத்துவதற்கு கடுமையாக முற்பட்டனர். கலகம் அடக்கும் பொலிசாரும் குவிக்கப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் தமிழின பேரழிவை அரசியல் மயமாக்காது மக்களின் படுகொலைக்கான ஒன்றாக ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டதால் எண்ணியவாறு அதனை நடத்தி கஞ்சி வழங்கப்பட்டதுடன் நிறைவு செய்யப்பட்டது.

1983 யூலை 23ல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரின் சடலங்கள் இதே கனத்தை மயானத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே கொழும்பில் திட்டமிட்ட பாரிய இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் அதன் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தலும் இடம்பெறவுள்ளது.

கடந்த வார முள்ளிவாய்க்கால் தமிழின பேரழிப்பினையொட்டி கனடிய அரச மட்டத்திலிருந்து வெளியான இரண்டு அறிக்கைகள் அனைத்துலக மட்டத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளன.

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ விடுத்த அறிக்கையில், ‘முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் கனடியர்களின் கதைகளை நான் அறிந்திருந்தேன். அதனால்தான் மே 18ஐ தமிழின படுகொலை நாளாக கடந்த ஆண்டு கனடிய நாடாளுமன்றம் பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது” என்று குறிப்பிட்டுள்ளதுடன் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என்றும் பிரதமர் ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

கனடிய எதிர்க்கட்சித் தலைவரான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்றே விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென கோரியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இவரது அறிக்கையும் வலியுறுத்தியுள்ளதுடன், 2013ல் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டை கனடா புறக்கணித்ததையும் நினைவுபடுத்தியுள்ளார்.

கனடிய உள்நாட்டு விவகாரங்களிலும் அரசியல் தீர்மானங்களிலும் எதிரும் புதிருமாக மோசமான வார்த்தைகளால் பொதுவெளியில் மோதிக் கொண்டிருக்கும் பிரதமர் ரூடோவும், எதிர்க்கட்சித் தலைவர் பொய்லிவ்றேயும் ஈழத்தமிழர் இனப்படுகொலை விடயத்தில் ஒரே கருத்துள்ளவர்களாக அறிக்கையிட்டு கனடிய ஈழத்தமிழரை ஆற்றுப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.

மே 18ம் திகதிக்கு முன்னரான ஒரு வாரத்தை தமிழின அழிப்பு கல்வி வாரமாக ஒன்ராறியோ மாகாண அரசின் உறுப்பினர் விஜய் தணிகாசலம் முன்மொழிந்த பிரேரணை சகல கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் 2022ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டதையிட்டு கோபமடைந்துள்ள இலங்கை அரசும் அதன் ஆதரவாளர்களும், அதனை எதிர்த்து தொடர்ச்சியாக கனடிய நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வேளையில், கனடியப் பிரதமரதும் எதிர்க்கட்சித் தலைவரதும் இனப்படுகொலையென சுட்டும் அறிக்கை இலங்கை அரசுக்கு மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வெளிப்பாடாக கொழும்பிலுள்ள கனடியத் தூதுவரை அழைத்து இலங்கை அரசின் ஆட்சேபணையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளதுடன் கனடிய பிரதமரின் அறிக்கையையும் கண்டித்துள்ளார்.

கனடாவாழ் தமிழ் மக்கள் இனப்படுகொலை விடயத்தில் மேற்கொண்ட முன்முயற்சிகள் போன்று பூகோளப்பந்தின் சகல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் ஊடாக இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை விஜய் தணிகாசலம் முன்வைத்திருப்பது அனைரதும் கவனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

வலி சுமக்கும் தமிழர் மனஉளைச்சலால் ஏற்படும் உணர்வு இடைக்கிடை தொய்வடைந்து போவதற்கான காரணம் என்ன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். மாவீரர் நாள், மே 18 இனஅழிப்பு நாள், யூலை மாத கறுப்பு வாரம், திலீபன் மற்றும் அன்னை பூபதியின் நினைவு நாள் போன்ற முக்கிய காலங்களில் மட்டும் உணர்வுபூர்வமாக இயங்கும் இவர்கள் மற்றைய நாட்களில் மறந்தவர்களாக இருப்பது ஏன்;?

தமிழ் மக்களிடம் சரியான அரசியல் தலைமை இல்லாமையே இதற்கான காரணம். எடுத்ததற்கெல்லாம் தங்களுக்குள்ளேயே போட்டி அறிக்கை, கண்டன அறிக்கை, எதிர்ப்பு அறிக்கைகள் என்றே இவர்கள் காலத்தைப் போக்குகின்றனர். தமிழ் மக்களின் தனிப்பெரும் அரசியல் தலைமையான தமிழரசுக் கட்சி தொய்வு நோயாளி போலாகியுள்ளது. கட்சியின் உள்ளக கூட்டப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சிங்கள பொலிசாரின் உதவியை நாடும் நிலைமை வெட்கக்கேடானது.

இந்த விண்ணாணத்தில் இலங்கை அரசுடன் தமிழ் கட்சிகள் ஒரே மேசையில் அமர்ந்து பேசப்போனால் எவ்வாறு பிரச்சனையைத் தீர்க்க முடியும்? இவர்களின் ஒற்றுமையின்மையும் பிளவுபாடும் சிங்களத் தலைமைகளுக்கு காலத்தை இழுத்தடிக்க வாய்ப்புக் கொடுக்கிறது. அத்துடன் பிரச்சனைகளுக்கான தீர்வை கானல்நீராக்கிக் கொண்டு போகிறது.

தமிழர் மீதான சிங்கள தேசத்தின் தாக்குதலை இனப்படுகொலை என அழைக்கலாமா என்ற கேள்வியும் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கிறது. இதற்கான விடைகாண எழுபது ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

1956 இலிருந்து தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை இனக்கலவரம் என்று அழைக்கவே இவர்கள் விரும்புகின்றனர். கலவரம் என்பது இரு பகுதியினரும் மோதிக்கொள்வது. காலாதிகாலமாக சிங்களவரால் தமிழர் தாக்கப்பட்டதை ஒப்புக்குக்கூட இனக்கலவரம் என்று கூறமுடியாது.

இனப்பாகுபாடு, இனஒதுக்கல், இனரீதியான தாக்குதல்கள் என ஆரம்பித்து உருவானவை 1958 மற்றும் 1983களில் இனஅழிப்பாக மாற்றம்பெற்றன. அரச இயந்திரங்கள் இதன் பின்னணியில் இயங்கியதால் இனஅழிப்பு இலகுவாக நிறைவேற்றப்படுகிறது.

2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழரை அவர்களின் பூர்வீக மண்ணில் கொன்று குவித்ததையும் காணாமல் போகச் செய்ததையும் இனசங்காரம் என்றே கூறவேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மே மாதம் 19ம் திகதியை போர்வீரர் தினமாக இலங்கை அரசே பிரகடனம் செய்து வெற்றிக் கொண்டாட்டம் நடத்துகிறது. வருடாவருடம் இந்நாளில் பல்லாயிரக் கணக்கான படையினருக்கு பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது. இவ்வருடம் 3,750 படையினர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது, தமிழின சங்காரத்துக்காக சிங்கள தேசத்து படைகளுக்கு சிங்கள ஆட்சிபீடம் வழங்கும் அதி உயர் பரிசு.

தங்கள் பூர்வீக மண்ணில் தங்கள் பிறப்புரிமையைக் கேட்ட தமிழரை கொன்று குவித்து அதில் போர் வெற்றி கொண்டாடும் ஓர் அரசிடமிருந்து எந்த வகையில் அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியும்? தமிழர் தேசம் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல. தமிழினப் படுகொலைகளை நித்தம் நித்தம் உரத்துக் கூறுவோம். ஒன்றாகக் கூறுவோம். இதனை நாங்கள் கூறவில்லையென்றால் வேறு யார் கூறுவது?

பனங்காட்டான்