மன்னாரில் மாணவர்கள் கடத்தல் முயற்சி : மன்றில் சந்தேக நபர்களை அடையாளம் காட்டாத மாணவர்கள்!

89 0

ன்னாரில் மாணவர்களை கடத்த முயற்சித்ததாக மன்னார் பொலிஸாரால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்குகள் தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் அந்த இரண்டு மாணவர்களும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

மன்னாரில் உள்ள பிரபல பாடசாலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை வெவ்வேறு தினங்களில் வெள்ளை வேனில் கடத்துவதற்கு ஒரு கூட்டம் முற்பட்டதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை மாலை தலைமன்னார், சிலுவை நகர் பகுதியில் வெள்ளை வேனில் வந்த சிலர் சொக்லேட்டை காட்டி மூன்று மாணவிகளை கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் தலைமன்னார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அந்த மாணவிகளை வெள்ளை வேனில் கடத்த முயற்சித்ததாகவும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அத்தோடு, தலைமன்னாரில் மாணவிகள் கடத்தல் தொடர்பாக இருவர் சந்தேகத்தின் நிமித்தம் கைதுசெய்யப்பட்டதான இரு வழக்குகள், மன்னார் பொலிஸார் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற மூன்று முறைப்பாடுகளையும் இச்சந்தேக நபர்களுடன் தொடர்புபடுத்தி போடப்பட்ட வழக்கு என மன்னார் நீதவான் நீதிமன்றில் மூன்று வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

அவற்றில் இரண்டு வழக்குகள் வெள்ளிக்கிழமை (19) மன்னார் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் இவ்வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணிகள் மற்றும் முதலியார் சகிதம் மூடப்பட்ட மன்றுக்குள் ஒரே நேரத்தில் இரு சந்தேக நபர்களுடன் மேலும் 14 பேர் இந்த அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது, சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்கு முதலாவதாக முன்சென்ற  மாணவர் அடையாள அணிவகுப்பில் நின்றவர்களை இரு முறை அருகில் சென்று பார்வையிட்டும் சந்தேக நபர் என எவரையும் அடையாளம் காட்டவில்லை.

அவரை தொடர்ந்து, இரண்டாவதாக முன்சென்ற மாணவர், தன்னை கடத்துவதற்கு வந்தவர்கள் முகத்தை மறைத்திருந்ததால், இவர்களில் எவரையும் தன்னால் அடையாளம் காட்ட முடியாதுள்ளது என அடையாள அணிவகுப்பில் நின்றவர்களை பார்க்காமலே ஒதுங்கிக்கொண்டார்.

அந்த இரண்டு சந்தேக நபர்களும் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்றாவது வழக்கு திங்கட்கிழமை மே 22ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவிருப்பதால், அன்றைய நாளிலும் இச்சந்தேக நபர்களும் முன்னிறுத்தப்பட்டு அடையாள அணிவகுப்பினை நடத்துமாறும் நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அன்றைய தினம் மேற்படி இரு வழக்குகளும் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.