சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக சகல பாடசாலைகளினதும் ஒத்துழைப்புடன் இந்த புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக் காலமாக நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பையும் பலவீனப்படுத்துவதற்கு வழிவகுத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். பொது சேவையின் தரத்தை உயர்த்துவதுடன் தற்போதுள்ள அமைப்பில் தரமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
புதிய பட்டதாரிகளின் ஆளுமை, ஆர்வம், அறிவு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது முக்கியத்துவமுடையதாகும். அனைத்து துறைகளிலும் சரியான நேரத்தில் சீர்திருத்தங்கள் அவசியமாகும்.