போர் வெற்றி கொண்டாட்டத்தை முதன்முறையாக புறக்கணித்த ராஜபக்சர்கள்!

119 0

வரலாற்றில் முதன்முறையாக 14 ஆவது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வினை ராஜபக்சர்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14 ஆவது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (19.05.2023 ) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பத்தரமுல்லை போர் வீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், 14 ஆவது வருட போர் வெற்றி கொண்டாட்டத்தினை ராஜபக்சக்கள் புறக்கணித்துள்ளனர்.2009 ஆம் ஆண்டு யுத்தத்தை வெற்றி கொண்டதாக சிங்கள மக்களால் போற்றப்படும் இறுதி யுத்தத்தின் போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வினை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தரப்பினருக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் நிகழ்வினை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவர்கள் கடந்த 13 வருடங்களாக போர் வீரர்களின் வெற்றி கொண்டாட்டங்களில் பங்குபற்றியிருந்ததுடன், வரலாற்றில் முதன்முறையாக 2023 ஆம் ஆண்டு நிகழ்வினை புறக்கணித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக போர் வெற்றி நாள் உரையினை வழங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதனை தவிர்த்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, பொது மக்கள் எதிர்ப்பினை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச பொது நிகழ்வினை தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.