நாகரீகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நாம் கற்கும் கல்வியிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், செயலிகள் மூலம் ஆர்டர் செய்யும் உணவின் டெலிவரி நேரத்தைக் கணிப்பது முதல் சமூக வலைதளங்களில் திரைப்படங்களைப் பரிந்துரைப்பது வரை பயனாளரின் ரசனைக்கேற்ப செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தில் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு என்பது தற்போது ஓ.டி.டி. திரைத்தளம், ஆன்லைன் ஸ்ட்ரீமிங், யூடியூப், உணவு விநியோக பயன்பாடுகள், ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆகியவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாட் ஜி.பி.டி., கூகுள் பேர்டு மற்றும் ஒரு சில நேரடி குரல் மொழிபெயர்ப்பு பயன்பாடுகளின் தோற்றம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆண்டு கணினி அறிவியல் பொறியியலுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (ஆர்ட்டிபீசியல் இன்ட்டலிஜன்ஸ்) படிப்புகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
நடப்பு கல்வியாண்டில் சுமார் 16,000 மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் படிப்புகளில் சேர வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வேகமாக வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் துறையை கற்பிக்க கல்லூரிகள் தயாராக இல்லை என்ற குறைபாடும் வந்துள்ளது. பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு பாடத்தை கற்பிக்க பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் இல்லை.
நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டால், பட்டதாரிகள் தொழிலுக்குத் தயாராக இருப்பார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் மற்றும் சக நண்பர்களின் அழுத்தத்தினால் மிகவும் சிறப்பு வாய்ந்த பி.டெக். படிப்பிற்கு அதிகம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இருப்பினும் கல்லூரிகளில் அந்த பட்டப்படிப்புக்கு தகுந்த பயன்பாடு சார்ந்த அறிவு, தரவு மேலாண்மை மற்றும் எந்திர கற்றல் வெளிப்பாடு ஆகியவை இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஒரு சில கல்லூரிகள் தொழில் வல்லுநர்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு படிப்புகளை உருவாக்கி நடத்துகின்றன.
அந்த கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும். கணினி அறிவியல் பொறியியலுக்கும், செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை என்று நிபுணர்களும், கல்வியாளர்களும் கூறுகின்றனர். ஆனாலும் இந்த படிப்புகளுக்கான பாடத்திட்டம் பொதுவானதாக இருக்கும் என்று அண்ணா பல்லைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளை பறிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை பயன்படுத்த அதிக பொறியாளர்கள் தேவைப்படுவதால், இது பொறியியல் பணிகளை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு என்பது தற்போது ஓ.டி.டி. திரைத்தளம், ஆன்லைன் ஸ்ட்ரீமிங், யூடியூப், உணவு விநியோக பயன்பாடுகள், ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆகியவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக எதிர்பார்ப்புகளுடன் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பி.டெக். செயற்கை நுண்ணறிவு பாடத்தை கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்து வருகிறார்கள்.