விண்வெளியில் திருமணம் செய்ய ரூ.1 கோடி கட்டணம்

96 0

பூமிக்கு மேலே விண்வெளியில் திருமணம் செய்யும் சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் வழங்குகிறது. இதற்கு ரூ.1 கோடி கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய சோஷியல் மீடியா காலகட்டத்தில் திருமணம் என்பது ஒரு சம்பிரதாயம் என்பதைத் தாண்டி ஒரு ஆடல், பாடல், வெட்டிங் போட்டோகிராஃபி, கப்புள் ரீல்ஸ் என ஒரு பேக்கேஜாக மாறியுள்ளது. இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவை தலைமைடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் ஒரு படி மேலே சென்று விண்வெளியில் திருமணம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்யேக கேப்ஸ்யூல்களில் தம்பதிகள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார். இதற்கு கட்டணமாக ரூ.1 கோடி ($125,000) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

2024ஆம் ஆண்டு தொடங்கவுள்ள இத்திட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இப்போதே முண்டியடித்துக் கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நெப்டியூன் கேப்ஸ்யூல்கள் விண்வெளியின் அழகை தம்பதிகள் கண்டு ரசிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார். இந்த கேப்ஸ்யூல்கள் தம்பதிகளின் பாதுகாப்புக்காக மணிக்கு 19 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும். மேலும் இந்த கேப்ஸ்யூல்களில் இணைக்கப்பட்டிருக்கும் கார்பன் நியூட்ரல் பலூன்கள் புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜனில் இயங்கக் கூடியவை என்பதால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானவை என்று கூறப்பட்டுள்ளது.