மும்பை தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை, இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய பாகிஸ்தான் அமெரிக்கர் டேவிட் ஹெட்லி மும்பை வந்து செல்ல அமெரிக்காவில் குடியுரிமை சேவை அளித்து வரும் தஹாவூர் ராணா (62) உதவியுள்ளார். இவர் முன்பு பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றியவர். கனடா குடியுரிமை பெற்ற இவர் அமெரிக்காவில் குடியுரிமை சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மும்பை தாக்குதல் வழக்கில் இவர் அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் உள்ளார். இவரை மும்பை தாக்குதல் வழக்கில் விசாரணைக்காக, ஒப்படைக்கவேண்டும் என இந்தியா கோரிக்கைவிடுத்தது. கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையே உள்ளதால், தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மரண தண்டனை
மும்பை தீவிரவாத தாக்குதலின் போது சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் தேவிகா நட்வர்லால் என்ற 9 வயது சிறுமியின் வலது காலில் குண்டு பாய்ந்தது.
இதில் உயிர் பிழைத்த அவருக்கு தற்போது 23 வயதாகிறது. தஹாவூர் ராணாவை இந்தியா கொண்டுவருவது பற்றி கருத்து தெரிவித்த தேவிகா, ‘‘மும்பை தீவிரவாத தாக்குதலில் நான் சுடப்பட்டேன். என்கண் முன்னால் பலர் இறந்தனர்.
இதில் தொடர்புடைய தஹாவூர் ராணா இந்தியா கொண்டுவரப்படவுள்ளதாக அறிந்தேன். அவருக்கு மரண தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார்.