நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி

104 0

 விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் ஒன்றியத் தலைவரும் கவுன்சிலருமான பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவராக பொறுப்பு வகித்தவர் பஞ்சவர்ணம். அண்மையில் இவரை ஒன்றியக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக மற்ற அனைத்து கவுன்சிலர்களும் தீர்மானம் நிறைவேற்றினர். அதையடுத்து, பஞ்சவர்ணத்தின் ஒன்றியத் தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டது. ஆனால், நரிக்குடி ஒன்றியத்தில் நடைபெறும் எந்த ஒரு திட்டப் பணிகள் குறித்தும் கவுன்சிலர் என்ற முறையில் பஞ்சவர்ணத்திற்கு தெரியப்படுத்தப்படுவது இல்லையாம்.

இந்நிலையில், 15வது மத்திய நிதிக்குழு மானிய நிதியின் கீழ் (வட்டார வளர்ச்சி) தெருக்குழாய் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், வாறுகால் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக கவுன்சிலர்கள் அவசரக் கூட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்ததாகவும், ஆனால், இதுபற்றி கவுனன்சிலர் பஞ்சவர்ணத்திற்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் பஞ்சவர்ணம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட அதனால், வட்டார வளர்ச்சி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தனது கேள்விக்கு உரிய விளக்கம் கிடைக்கவில்லை என்றும், முன்னாள் ஒன்றியத் தலைவருக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு கவுன்சிலர் பஞ்சவர்ணம் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்சினைக்குப் பிறகு, நேற்று நடைபெற இருந்த கவுன்சிலர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதோடு, நேற்று நடைபெற இருந்த ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலரால் அறிவிக்கப்பட்டது.