மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி, சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முன்னெடுப்பது தொடர்பான மீளாய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று (19) வெள்ளிக்கிழமை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களில் மீள்புதுப்பிக்கத்தக்க உட்கட்டமைப்பு மற்றும் விநியோகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உமா ஓயா அனல்மின் நிலையத்தின் முதல் பாகத்தின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் பாகம் செப்டெம்பர் மாதத்திலும் நிறைவடையும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் நிர்மாண நிறுவனமான ‘ஃபராப்’ நிறுவனத்துக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாகவும், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டங்களின் கீழ் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் சேர்க்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாண நிறுவனமான ‘ஃபராப்’ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி அலி வக்கிலி, உமா ஓயா திட்ட முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.