இந்தியா விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றதா?

134 0

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 8 ஆண்டுகளாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் எமது ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு ஒன்றையும் நடத்தி இருக்கின்றது.

இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் கட்சிகளோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அங்கம் வகிக்கின்றோம். கடந்த 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து எனது வீட்டிற்கு வந்து என்னை விசாரித்தார்கள். விசாரணையின் பின்னர் 15ஆம் திகதி மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்பு அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்கள்.

எனினும் கட்சி பணிகள் உள்ளதால் குறித்த திகதியில் என்னால் வரமுடியாது பிறிதொரு திகதியில் வருவதாக கூறியிருந்தேன். எனினும் அவர்கள் 16ஆம் திகதி மீண்டும் எனது வீட்டுக்கு வந்து என்னிடம் நான்கு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.

மூன்று பேர் கொண்ட குழுவினர் இந்த விசாரணை நடவடிக்கைகள் ஈடுபட்டிருந்தனர்.என்னையும் எனது குடும்பத்தையும்  மிரட்டும் வகையில் இவர்களது விசாரணை அமைந்திருந்தது.குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்று அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவு போன்று காட்டிக் கொண்டாலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கின்றது.அக்டோபர் மாதம் 10ஆம் திகதி டெல்லியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் நான் கலந்து கொண்டமை தொடர்பாக விசாரித்தார்கள்.

குறித்த மாநாட்டில் பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும்,மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் உரிமை, 13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயங்களை நான் இந்தியாவிடம் வலியுறுத்தி இருந்தேன்.

ஜனநாயக போராளிகள் கட்சி இந்தியா எவ்வாறன ஆலோசனைகளை வழங்குகின்றது.
இந்தியா பணம் வழங்குகின்றதா? போன்றவற்றை இவர்கள் விசாரணைகளின் போது கேட்டிருந்தார்கள்.இந்தியா இங்கு என்ன செய்யுமாறு தங்களை பணித்துள்ளார்கள் போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு நான் கூறினேன். இந்திய அதிகாரிகளை சந்தித்தால் அவர்கள் இலங்கை நாட்டு மக்களின் சுதந்திரமான வாழ்வினை விரும்புவதாக என்று கூறுவார்களேயொழிய தமிழ் மக்கள் தொடர்பாக எந்த விதமான கருத்துக்களை அவர்கள் கூறுவதில்லை என்றேன்.

குறிப்பாக இந்தியா பணத்தினை தந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட சொல்கின்றதா என்ற தொனியில் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்திய அரசாங்கம் இலங்கை பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்தித்தபோது இலங்கைக்கு முதலாவதாக உதவி செய்து இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டிருந்தது. என்பதனையும் நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இவர்களின் இத்தகைய விசாரணைகள் தொடர்பாக இந்திய தூதரகம் மற்றும் ஏனைய தூதரகங்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு நாங்கள் இவர்களின் விசாரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றோம்.குறிப்பாக சில தமிழ் அரசியல்வாதிகளும் போராளிகளை காட்டிக் கொடுத்து அரசுடன் இணைந்து சதி முயற்சி செய்கின்ற தகவல்களும் எமக்கு கிடைத்திருக்கின்றன.

எனவே தமிழ் அரசியல்வாதிகள் போராளிகள் மீது இவ்வாறு கட்டவிழ்த்து விடப்படும் விசாரணைகள் தொடர்பில் மௌனம் காக்காது அதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம்,தியாகி திலீபன் நினைவு தினம்,மாவீரர் நாள் நினைவு தினங்களை நீங்கள் எவ்வாறு செய்கின்றீர்கள்? பணம் யார் வழங்குகிறார்கள் போன்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியிருந்தார்கள்.இதற்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பின் மூலமே நாங்கள் இத்தகைய விடயங்களை செய்கின்றோமேயொழிய எந்த ஒரு நாட்டினுடைய நிதி பங்களிப்பில் இத்தகைய நிகழ்வுகளை செய்வதில்லை என்பது தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

அவர்கள் மீண்டும் கேட்டார்கள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இந்தியா உங்களுக்கு பணம் வழங்குகின்றதா? என்பது தொடர்பில் அவர்களுடைய கேள்வி அமைந்திருந்தது.

குறிப்பாக ஜனநாயக போராளிகள் கட்சியினுடைய ஆவணங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறு கூறியிருக்கின்றார்கள் அதற்கு நான் கூறுகின்றேன் எங்களுடைய ஆவணங்கள் தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்று கூறினேன்.தினமும் ஆவணங்களை வழங்குமாறு தொலைபேசி அழைப்பு எடுத்த வண்ணம் உள்ளார்கள்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம். ஜனநாயக ரீதியாக செயல்படுகின்ற எங்களை நீங்கள் இவ்வாறான அடக்குமுறைகள் மூலம் எம்மை கட்டுப்படுத்த முயற்சித்தால் அது வேறு விளைவினை ஏற்படுத்தும் என்பதையும் நாம் கூறிவைக்க விரும்புகின்றோம்.

குறிப்பாக இந்தியா  விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றதா? என்றும் கொழும்பிலிருந்து வந்த பயங்கரவா தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டார்கள். குறிப்பாக ஆயுதம் பணம் என்பவற்றை வழங்கி மீள் உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றார்களா? என்றும் அவர்கள் கேட்டார்கள் என்றார்.