டென்மார்கில் ஓங்கி ஒலித்த நிதீக்கான குரல்கள்

229 0

இன்று வியாழக்கிழமை  18.05.2023 அன்று டென்மார்க்  தலைநகரில் அமைந்துள்ள Sankt Annaes plads சதுக்கத்தில் ஒன்று கூடிய மக்கள் அங்கு கவனயீர்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர், பின்பு அங்கிருந்து  கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி பெரும் எழுச்சியுடன்,
பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
இப்பேரணியில் பதாகைகள், தமிழீழத் தேசியக்கொடி மற்றும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி, உரத்த குரலிலான ஆர்ப்பரிப்புடன் நகர வீதிகள் ஊடாக இப்பேரணி கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தை வந்தடைந்தது. அதன்பிறகு அங்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த அனைவருக்குமாக சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்த நினைவுத் தூபிக்கு முதன்மைச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் மற்றும் பொதுமக்களின் மலர் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர்  இப்பேரணியில் பங்குகொண்ட டென்மார்க்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளையோர் மற்றும் செயற்ப்பாட்டாளர்களின்  எழுச்சியுரைகளுடன் கவிதை நிகழ்வும் இடம்பெற்றது.  குறிப்பாக  இளையோர்களது செயற்பாடுகள் மற்றும்  அவர்களது எழுச்சியுரைகளும்   மிகவும் காத்திரமாக அமையப் பெற்றிருந்தது. இறுதியாக தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று கோசம் உரக்க ஒலித்ததுடன், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் பட்ட வேதனைகளை எமது அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்குடன் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” அனைவருக்கும் பரிமாறப்பட்டது குறிப்பிடதக்க நிகழ்வாக இடம் பெற்றது.