திருக்கோவில் பிரதேசத்தில் கல்குவாரி அமைப்பதற்கான அனுமதி இடைநிறுத்தம்

91 0

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி, சங்கமன் கிராமங்களில் பெரும் பாறைகளை உடைத்து கல்குவாரி அமைப்பதற்காக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கல்குவாரி கட்டுமானத்தினால் இந்த கிராமங்களில் ஏற்படப்போகும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தாண்டியடி, சங்கமன் கிராமங்களில் மலைகளை உடைத்து கல்குவாரி அமைப்பது தொடர்பில் திருக்கோவில் பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் ஏனைய திணைக்களங்களால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும்,  கல்குவாரி அமைக்கப்படுவதால் அப்பிரதேசத்துக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதால் பிரதேச அமைப்புகள், பொதுமக்களின் வேண்டுகோளுக்கமைய இந்த கல்குவாரி அமைக்கும் பணியை  இடைநிறுத்துமாறும் தெரிவித்து முன்மொழிவொன்று திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

குறித்த கிராம மக்களின் சார்பிலான, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் இந்த முன்மொழிவை திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி குழு ஆராய்ந்தது.

அதனையடுத்து, தற்போதைய கால சூழ்நிலையில் கல்குவாரி தேவையற்றது என்றும், கல்குவாரி அமைக்கும் விடயத்தில் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும், பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இவ்வாறானதொரு கல்குவாரி அவசியமான ஒன்றல்ல என்றும் தெரிவித்து கல்குவாரி அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை அபிவிருத்தி குழு இடைநிறுத்தியுள்ளது.

திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமானது பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும், அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டி.வீரசிங்க தலைமையில் இடம்பெற்றபோது இவ்விடயம் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனால் பேசப்பட்டது.

இதன்போது கல்குவாரி அமைப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவிக்கையில்,

திருக்கோவில் பிரதேச செயலாளரின் அனுமதியையோ, ஆலோசனைகளையோ பெறாமல் கல்குமாரி அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் சாதாரண ஒரு குடிமகனால் அப்பிரதேசத்துக்குள் செல்ல முடியாது, எதையும் செய்துவிடவும் முடியாது.

ஆனால், வனவள பாதுகாப்புத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, புவிச்சரிதவியல் திணைக்களம் போன்றன பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் கல்குவாரிக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக நான் அறிகிறேன்.

இது தொடர்பில் குறித்த பிரதேசத்தின் பொது அமைப்பின் பிரதிநிதிகள் பல முறைப்பாடுகளை என்னிடம் முன்வைத்துள்ளனார்.

ஏற்கனவே இவ்வாறு தாண்டியடியில் கல்குவாரி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட போது அங்கு பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன.

மக்கள் செறிந்து வாழ்வதும், கால்நடைகள் வளர்ப்பதுமான இடங்களாக அந்த கிராமங்கள் காணப்படுவதால் பிரதேச செயலாளர் உட்பட்டவர்களோடு நானும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்தபோதே, இந்த திட்டத்துக்கு சில தடைகளை பிரதேச செயலாளர் ஏற்படுத்தினார்.

எனவே, இந்தப் பிரதேசத்தில் இவ்வாறு மலைகளை உடைப்பது, கல்குவாரி அமைப்பது தொடர்பான விடயங்கள் கையாளப்படுகின்ற போது இங்குள்ள பிரதேச செயலாளரின், மக்கள் அடிப்படை அமைப்புகளின் நிலைப்பாடுகளை அறிந்தே இதற்குரிய அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த முயற்சிகளின்போது பாரிய பிரச்சினைகள் எமது பிரதேசத்தில் எழுந்துள்ளன.

எனவே, இது தொடர்பில் பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள் தங்கள் கருத்துகளை வழங்க வேண்டும் என்பதுடன், இதனை தடை செய்வதற்கான தீர்மானத்தையும் இப்பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் இக்கல்குவாரியினை அமைப்பதால் ஏற்படுகின்ற பாதக நிலைமை குறித்து தெளிவுபடுத்தினர்.

அதன் பின்னர், பொது அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் தற்போது நாட்டில் எவ்வித பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளும் இடம்பெறாத நிலையில் சூழலுக்குப் பாதகமாக அமையும் இவ்வாறான கல்குவாரி அனுமதிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அபிவிருத்தி குழு தலைவரால் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதேவேளை இல்மனைட் அகழ்வினை தடை செய்து, பிரதேச அபிவிருத்தி குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் மீறி, இல்மனைட் தொழிற்சாலை அலுவலக வேலைகள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் முறைப்பாடு செய்தனர்.

பிரதேச அபிவிருத்திக் குழுத் தீர்மானமே இறுதியானது. இதனை மீறி யாரேனும் செயற்படுவாரானால், பாதுகாப்புப் பிரிவினர் எதுவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபிவிருத்தி குழு தலைவரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.