சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்! தர்மலிங்கம் சுரேஸ்

132 0

ஆங்கிலேயர் இந்த நாட்டை சிங்கள தேசத்திடம் கையளித்து 75 வருடங்களாக ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் கீழே தமிழர்களை அடக்கும் முகமாக சிங்கள பேரினவாத அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

எனவே சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பை கொண்டுவரும் பட்சத்தில் தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியம் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு தமிழ் தேசிய முக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வாகரை மாணிக்கக்கரை கடற்கரையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழர்களை பொறுத்த மட்டிலே 75 வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக இருக்கும் அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும். எங்கள் மீது இதுவரை நடத்தப்பட்ட இனழிப்புக்காக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட யுத்த குற்ற உள்ளகபொறி முறை ஊடாக நடத்தும் விசாரணை நிறுத்தப்பட வேண்டும். அதேபோன்று 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான 13வது திருத்தசட்டம் திருத்தப்பட வேண்டும்.

அத்துடன் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழ் தேசம் சுயநிர்ணய உரிமை, இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும். பயங்கரவாத சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும். காணாமல்போனோருக்கான நீதி கிடைக்க சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பரிகாரம் கிடைக்க வேண்டும்.

எனவே இந்த தமிழ் மக்களை இந்த தீவிலே நிம்மதியாக வாழவைக்க கூடிய ஒரு சூழ்நிலை இந்தியாவுக்கு இருக்கின்றது. இருந்த போதும் இந்தியாவை பொறுத்தமட்டில் தங்களது நலநனை கருத்தில் கொள்ளாது எங்கள் மக்கள் நிம்மதியாக வாழக்சூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக இந்த நாடு அரசியல் அமைப்பை மாற்றி அமைக்க சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.