நாட்டில் வறுமை நிலை தீவிரமடைந்துள்ளதற்கு மின்சார சபை பொறுப்புக்கூற வேண்டும். மின்கட்டணத்தை 141 சதவீதத்தால் அதிகரித்து விட்டு 3 சதவீதத்தால் குறைப்பது முறையற்றது.
எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பு, மின்னுற்பத்திக்கான கேள்வி குறைவு ஆகியன காரணிகளை கருத்திற் கொண்டு மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 27 சதவீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்கும் யோசனையை இலங்கை மின்சார சபை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்தது.
மின்னுற்பத்திக்கான செலவுகளின் உண்மை தொகையை மறைத்து போலியான தரவுகளை முன்னிலைப்படுத்தி 3 சதவீதத்தால் மின்சார கட்டணத்தை குறைக்க மின்சார சபை உத்தேசித்துள்ளமை முறைக்கேடானதொரு செயற்பாடாகும்.
போலியான தரவுகளை முன்னிலைப்படுத்தியே கடந்த பெப்ரவரி மாதம் 66 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் 35 சதவீதத்தால் மாத்திரமே மின்கட்டணத்தை அதிகரித்திருக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அறிவுறுத்தலை அரசியல் அதிகாரம் பலவீனப்படுத்தியது.
இச்சந்தர்ப்பத்தில் மின்சார சபை மதிப்பீடு செய்த 16,550 மெகாவாட் மின்சாரத்துக்கான கேள்வி தவறானது என்பதை சுட்டிக்காட்டினோம்.இந்த வருடத்துக்கான மின்னுற்பத்தியின் கேள்வி 15,050 மெகாவாட் என ஆணைக்குழு மதிப்பீடு செய்தது. தமது மதிப்பீடு பிழை என்பதை மின்சார சபை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மின்னுற்பத்திக்கான செலவு 392 பில்லியன் ரூபா என மின்சார சபை ஆரம்பத்தில் மதிப்பீடு செய்தது. ஆனால் தற்போது எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கான மின்னுற்பத்தியின் செலவு 285 பில்லியன் ரூபா என மின்சார சபை குறிப்பிடுகிறது.
அவ்வாறாயின் மின்னுற்பத்திக்கான செலவு குறைவடைந்து,107 பில்லியன் ரூபா மிகுதியாகும்.இவ்வாறான நிலையில் மின்கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள போது 3 சதவீதத்தால் மாத்திரம் கட்டணத்தை குறைப்பதால் மின் பாவனையாளர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது.
மின்சாரம் தொடர்பான சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமையவே மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதனை விடுத்து மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் பதிவுக்கு அமைய மின்கட்டணத்தை திருத்தம் செய்ய முடியாது.
நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நியாயமான முறையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும். மின்சார சபை இலாபடைவதற்கும், அரச வங்கிகளிடம் பெற்றுக்கொண்ட கடனையும் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு கட்டணத்தை திருத்தம் செய்தால் மின்பாவனையாளர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.
நாட்டில் வறுமை நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறது.இதற்கு மின்சார சபையின் நிதி மோசடியும், அரசியல் தலையீடும் ஒரு காரணியாக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 75 சதவீதத்தாலும், பெப்ரவரி மாதம் 65 சதவீதத்தாலும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது.மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.
தரவு மற்றும் தொழினுட்ப காரணிகளை அடிப்படையாக கொண்டு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் அரசியல் அதிகாரத்தில் மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சாரத்துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கைக்கு நான் அனுமதி வழங்கவில்லை.
சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தற்போது அரசியலாக்கப்பட்டது.அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் தரப்பினர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் மின்சாரத்துறை அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்டு மின்கட்டணத்தை முறையற்ற வகையில் அதிகரிக்க அனுமதி வழங்கினார்கள்.
எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைவடைந்துள்ளது.இதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும்.ஆகவே 3 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைக்கும் தீர்மானம் முறையற்றது.
தரவு,செலவு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு மின்கட்டணத்தை 27 சதவீதத்தால் குறைக்க முடியும். ஆகவே என்னை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் தீவிரமாக முயற்சிக்கிறது.
இந்த பதவிக்கு புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அரசியல்வாதிகளின் கட்டளைகளுக்கு அமைய செயற்படாமல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு மதிப்பளித்து நாட்டு மக்களுக்காக செயற்பட வேண்டும் என்றார்.