சுமார் மூன்று தசாப்த காலமாக நீடித்த போரினது முடிவின் 14ஆவது வருட நிறைவை (மே 18) நாடு நினைவுகூர்ந்து வருகிறது.
இரத்தக்களரியில் முடிவடைந்த போர், மக்களின் வாழ்வில் தொடர்ந்தும் அதன் தாக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள், மாண்டுபோன தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்துகொண்டிருக்கின்ற அதேவேளை, மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை சேர்ந்தவர்கள் காணாமல்போன தங்கள் அன்புக்குரியவர்கள் விரைவில் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வழமைபோன்று அரசாங்கம் போர் வெற்றியைக் குறிக்கும் விதமாக மே 19 நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறது. இது நாட்டின் பெரும்பான்மையினரது உணர்வுகளை பிரதிபலிப்பதாக அமைகிறது.
போர் முடிந்துவிட்ட போதிலும், அதற்கு வழிவகுத்த பிரச்சினைகளும், அவற்றில் இருந்து தோன்றுகின்ற புதிய பிரச்சினைகளும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதுடன், நாடு அதற்கு இருக்கின்ற ஆற்றல்களை பயன்படுத்தி முன்னேறுவதற்கு குந்தகமாக அமைகின்றன.
நாடு தொடர்ந்தும் பிளவுபட்ட ஒரு குடும்பத்தைப் போன்றே காணப்படுகிறது. பிளவுகளை குணப்படுத்தாத வரை நாடு வெற்றிபெற முடியாது. பிளவுகளை கணப்படுத்துவதற்கு உண்மையான இணக்கப்போக்குடைய, இலங்கையை உருவாக்கும் நோக்குடைய, ஒரு அரசியல்ஞானிக்குரிய பண்புகளைக் கொண்ட தலைமைத்துவம் தேவை.
காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையை கையாள்வது நிறைவுசெய்யப்படாத, மிகவும் அவசரமான பணியாக இருக்கிறது.
மக்களின் உணர்வுகளை திருப்திப்படுத்தக்கூடிய முறையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். தங்களது கவலை குறித்து அரசு அக்கறை செலுத்தி நீதி கிடைக்கச் செய்யவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அரசியலமைப்பின் பிரகாரம், அதிகாரப் பரவலாக்கத்துக்கான மாகாண சபைகள் முறைமை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வது இரண்டாவது முக்கியமான பணியாகும்.
மாகாண சபைகளுக்கு போதுமான நிதி வளங்கள் கிடைக்கச்செய்யப்பட வேண்டும். மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக மக்களால் தெரிவுசெய்யப்படும் மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படக்கூடியதாக ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பதற்கு மாகாண சபைகள் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதும் அவசியமாகும்.
நிறைவுசெய்யப்படாத வேறு பணிகளும் இருக்கின்றன. ஆனால், மேற்கூறப்பட்ட இரு பணிகளையும் கையாள்வதற்கு உண்மையான அக்கறை இருக்குமானால், ஏனைய பணிகளை தன்பாட்டில் தொடரமுடியும்.
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்காகவும், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் அதிகரிப்பதை தடுக்கவும் இந்த பணிகளை அவசரமாக முன்னெடுக்கவேண்டியிருக்கிறது.
சர்வதேச தடைகள், போர்க் குற்றங்களை செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவர்கள் மீதான பயணத்தடைகளின் வடிவில் ஏற்கெனவே பிரச்சினை கொடுக்கத் தொடங்கிவிட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் பொருளாதாரச் சலுகையை பாதுகாக்கவேண்டிய தேவை இருக்கிறது.
தமிழ் அரசியல் கட்சிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி ஆரம்பித்திருப்பதை தேசிய சமாதானப் பேரவை வரவேற்கிறது.
இந்த பேச்சுவார்த்தைகள் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நேர்மறையான வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில், முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி விரிவுபடுத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இவை தொடர்பில் தனது நோக்கங்களை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் எதிரணி அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை அவர் ஆரம்பிக்கவேண்டும் என்றும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
அவ்வாறு செய்தால்தான் காணப்படக்கூடிய இணக்கப்பாடுகள் சகல தரப்புகளையும் அரவணைப்பதாகவும் நாட்டின் சகல இன, மத சமூகங்களின் உச்சபட்ச ஆதரவை பெறக்கூடியதாகவும் இருக்கும்.