திருகோணமலையில் வியாழக்கிழமை (18) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழின அழிப்பு என்ற நிகழ்வு இன மோதல்களுக்கோ அல்லது உயிராபத்துக்களுக்கோ காரணமாகிவிடக் கூடாது என திருமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குற்றவியல் வழக்கு சட்டத்தின் 106(1) பிரிவின் பிரகாரம் விடுக்கப்படும் உத்தரவு வழக்கு எண் ஏ.ஆர்.1523/23இன் முறைப்பாட்டாளரான திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் கே. ஜயரத்னவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம், 2023.05.18 இன்றைய திகதியில் திருகோணமலை நகரில் திட்டமிடப்பட்டுள்ள தமிழின அழிப்பு என்ற நிகழ்வை நடத்துவது மற்றும் பொதுமக்கள் சுகாதாரம், உயிராபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் அல்லது இனங்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுத்தும் வகையில் நடத்தக்கூடாது என்பதை கீழ் குறிப்பிடுகின்ற நபர்களுக்கு உத்தரவு விடுக்கப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அழகுராசா விஜேகுமார் மற்றும் யாழ். பல்கலைக்கழத்தின் கலைப்பீட மாணவர் சங்கத்தின் பிரதி தலைவர் வாசரத்ணம் தர்ஷன் மற்றும் திருமலை மாணவர் தேசிய ஒன்றியம், திருகோணமலை தமிழ் தேசிய சபையின் தலைவர் ஜெரோம் மாஸ்டர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சண்முகன் குகதாசன் உட்பட 8 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.