முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அனைதினதும் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் கடந்த 2009 மே 18 ஆம் திகதி மௌனிக்கச் செய்யப்பட்டது.
இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150000 வரையான தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்திற்கான வரைபு 1987 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோது, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்ட விடயங்களைத் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாகக் கூட கருத முடியாது என்பதனைச் சுட்டிக்காட்டி அதனைச் சட்டமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாம் என்றுகோரி தமிழ்த் தலைவர்களால் அன்றைய இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டது.
எனினும் அக்கோரிக்கையை முற்றாகப் புறந்தள்ளி தீர்வு என்ற பெயரில் தமிழ் மக்களது விருப்புக்கு மாறாகத் தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்ட 13ஆம் திருத்தத்தையும் ஒற்றையாட்சியையும் நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்துப் போராடியமையினாலேயே தமிழ் மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டிருந்தார்கள்.
தமிழ்த் தரப்பின் கோரிக்கைகளை முற்றாகப் புறக்கணித்து 1987 நவம்பர் 14 இல் பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தமானது சட்டமூலமாக நிறைவேற்றப்பட்டு முழுமையாக நடைமுறையில் உள்ளபோதே மேற்படி இனவழிப்பு அரங்கேற்றப்பட்டது.
உரிமைக்காகப் போராடியமைக்காக இவ்வாறு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரவேண்டிய வரலாற்றுக்கடமை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டும்.
அத்துடன் அவர்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து போராடினார்கள் என்பதும், அக்கோரிக்கைகளை இறுதிவரை கைவிட மறுத்து உறுதியாக நின்றமையினாலுமே இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகள் எமது அடுத்த சந்ததிக்குக் கடத்திச் செல்லப்படல் வேண்டும்.
அதனூடாக இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியில் விசாரணையை வலியுறுத்துவதுடன், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வுகளை நிராகரித்துத் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வை நோக்கி மக்களை அணிதிரட்டிச் செல்வதும் அவசியக் கடமையாகும்.
அவ்வாறு இனவழிப்பு அரங்கேற்றப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தையும், ஒற்றையாட்சியையும் நிராகரித்து, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிகப்பட்ட அடிப்படையிலான சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியே சனநாயக வழிமுறையிலான தேர்தல்கள் மூலம் ஆணை வழங்கி வந்துள்ளனர்.
நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து கடந்த 36 ஆண்டுகள் முழுமையாக நடைமுறையில் உள்ள 13ம் திருத்தச் சட்டத்தினை, நடைமுறையில் இல்லாதது போன்று பாசாங்கு செய்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோருவதானது, அதனைத் தீர்வாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாகும்.
கடந்த 75 வருடங்களாகத் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுவந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பினை 13ஐ நடைமுறைப்படுத்தல் என்னும் பெயரில் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடுவதற்கும், அதனை வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்து அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்குமான திரைமறைவுச் சதிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இத்தகைய செயற்பாடுகள் முள்ளிவாய்க்கால் வரை நடந்தேறிய தியாகங்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும். 1987 இல் தமிழ் மக்களின் சம்மதமின்றி ஒருதலைப்பட்டசமாகக் திணிக்கப்பட்ட 13 ம் திருத்தச் சட்டத்தை நிராகரித்து, 2009 வரை மேற்கொள்ளப்பட்டிருந்த தியாகம் நிறைந்த உன்னதமான விடுதலைப் போராட்டத்தைத் தவறானதாக சித்தரிக்க முயலும் செயற்பாடுமாகும்.
இச் சதியை மக்களுக்கு அம்பலப்படுத்தி, ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வை வலியுறுத்தி மக்களை அணிதிரட்ட வேண்டிய வரலாற்றுக் கடமை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை முன்னடுக்கும் ஒவ்வொரு தரப்பினருக்கும் உண்டு.
கீழ்வரும் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வழமைபோன்று இவ்வாண்டும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அணிதிரளவேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.
• தமிழ் மக்கள்மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை நடாத்தப்படல் வேண்டும். பொறுப்புக் கூறல் தொடர்பிலான எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் முற்றாக நிகராரிக்கின்றோம்.
• 1987 இலேயே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கூடக் கருத முடியாது என்று, அன்றே தமிழ்த் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டிருந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை, ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாகத் திணிக்க முடியாது என்பதையும், ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
• ஸ்ரீலங்காவின் 75 வருடத் தோல்விக்குக் காரணமான ஒற்றையாட்சி அரசியல் யாப்புக் கைவிடப்பட்டு, புதிய அரசியல் யாப்பானது தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் சமஸ்டி யாப்பாக அமைய வேண்டும்.
• பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படல் வேண்டும் என்பதுடன் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
• புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படுவது நிறுத்தப்படல் வேண்டும்.
• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிய சர்வதேச விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.
மேற்படி கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் மே 18 ஆம் திகதி வடக்குக் கிழக்கில் மக்கள் தமது வழமையான நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி முள்ளிவாய்க்கால் மே 18 இனப்படுகொலையை நினைவுகூருமாறு அழைக்கின்றோம்.
அந்தவகையில் வடக்குக் கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தினதும் அன்றாடச் செயற்பாடுகளை நிறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்குமாறும், வியாழக்கிழமை மே-18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.