முள்ளிவாய்க்கால் நோக்கிய ஊர்தி பவனியின் 6ஆம் நாள் பயணம் ஆரம்பம்

85 0

தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய ஊர்தி பவனியின் ஆறாவது நாள் பயணம் வரணியில் ஆரம்பமாகியது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்த கப்பலடிப் பகுதியிலிருந்து தொடங்கிய இந்த ஊர்தி பவனியானது வவுனியா, மன்னார் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம், கிளிநொச்சி, பூநகரி, சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்து அங்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று, ஆறாவது நாள் பயணம் வரணி மத்திய கல்லூரி முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமானது.

இந்த ஊர்தி பவனியானது கொடிகாமம், பளை, பரந்தன் தர்மபுரம், விசுவமடு ஊடாக வள்ளிபுனம் பகுதியை சென்றடையும்.

இதனைத் தொடர்ந்து நாளை காலை வள்ளிபுனம் செஞ்சோலை வளாக சந்தியில் இருந்து ஆரம்பமாகும் ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு சந்திக்கு சென்று காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியிலிருந்து ஊர்தியுடன் மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் அடங்கிய மாபெரும் ஊர்தி பவனியாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையும்.

அந்த வகையில் அனைவரையும் இந்த ஊர்தி பவனியில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.