மரக்கடத்தல் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு! விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் படுகாயம்

88 0

வவுனியாவில் நேற்று (16.05.2023) அதிகாலை இடம்பெற்ற சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கை விஷேட அதிரடி படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பறயனாளங்குளம் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு, சாளம்பன் பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் சட்டவிரோத மர கடத்தல் நடவடிக்கை ஒன்றினை சுற்றி வளைப்பதற்காக சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்துமாறு வழி மறித்த போது குறித்த வாகனம் விஷேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் வாகனத்தை நிறுத்த வாகனத்தின் முன் சக்கரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கப் ரக வாகனத்தில் இருந்த சந்தேகநபர் வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் போதே வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.பறயனாளங்குளம் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (33529) சந்திரதிலக என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகத்தரின் காயங்கள் பாரதூரமானதாக இல்லாததால் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வாகனமும் அதனுள் இருந்த சட்டவிரோதமாக ஏற்றி செல்லப்பட்ட ஏழு பெரிய முதிரை மரக்குற்றிகளும் ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும் பறயனாளங்குளம் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.