நொச்சிக்குப்பம் மீனவர்களுக்காக கட்டப்பட்ட 1,188 வீடுகளை அவர்களுக்கே வழங்க வேண்டும்

88 0

நொச்சிக்குப்பம் மீனவர்களுக்காக கட்டப்பட்ட 1,188 வீடுகளை அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என மீனவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய மீனவர் சங்கத்தின் நிறுவனர் எம்.இ.ராஜா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் மீனவர்கள் 18,500 பேர் இங்கு பூர்வ குடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் இங்குள்ள மீனவர்களின் குடிசைகள் மற்றும் உடைமைகள் சேதம் அடைந்து அவர்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரூ.6 ஆயிரம்கோடி சுனாமி நிதியிலிருந்து 18 ஆயிரம் குடியிருப்புகள் துரைப்பாக்கம் கண்ணகி நகர், சோழிங்கநல்லூரில் கட்டப்பட்டன.

கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு 2,882 வீடுகள் கட்டித் தருவோம் என்று வாக்குறுதி அளித்தார். பின்னர், இதில் 1,188 வீடுகள் நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு என்று அறிவித்தனர்.

இப்போது கட்டி முடிக்கப்பட்ட 1,188 வீடுகள் முழுவதும் மீன்வளத் துறை மூலம் கணக்கிட்டு நொச்சிக்குப்பம் பகுதி மக்களைப் பூர்வ குடிமக்களாகக் கருதி பட்டினவர் சான்றிதழ் மூலம் திருமணமான ஆண், பெண் என இருபாலருக்கும் வழங்க வேண்டும்.

மீனவர் அல்லாதவர்களை சுனாமிநிவாரண நிதியில் கட்டப்பட்ட கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள 18 ஆயிரம் வீடுகளில் குடியமர்த்த வேண்டும். மேலும், 3 ஆயிரம் குடியிருப்புகளை கூடுதலாகக் கட்டி மீனவப் பெண்களைக் குடியமர்த்த வேண்டும்.

நொச்சிக்குப்பம் பகுதிகளில் வாழும் பூர்வ குடிமக்களுக்கு தங்களது சொந்த நிலத்தை அறநிலையத் துறையின் தடையின்மை சான்று பெற்று பட்டா வழங்கப்பட வேண்டும். கடற்கரை பாதுகாப்பு சட்டம் மூலம், கடல் பூர்வ குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும்.

இதற்காகப் போராடிய மீனவர் தலைவர்கள் பாரதி, கோசுமணி, ஊர் தலைவர் ரூபேஷ் குமார், ரவிக்குமார் ஆகியோர் பொய் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

மீனவர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகளை மீனவர்கள் அல்லாதவர்களுக்கு ஒதுக்கக் கூடாது. இந்தவிவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.இது தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு ராஜா கூறினார்.

இச்சந்திப்பின் போது, அகில இந்திய மீனவர் சங்கத்தின் மாநில தலைவர் கருணாமூர்த்தி, தேசிய அமைப்புச் செயலாளர் சேவியர், தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ரேகா குளோரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமன் உள்ளிட்ட 65 பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், “கைது செய்யப்பட்ட நொச்சிக்குப்பம் மீனவர்களை விடுவிப்பதுடன், அனைத்து கடலோர மீனவர்களுக்கும் நீண்டகால வீட்டுவசதி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.