மின்னணு முறையில் போக்குவரத்து விதிமீறலைக் கண்காணித்து அபராதம் விதிப்பதற்கான நடைமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தமிழக அரசின் உள்துறை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்ப தாவது:
புதிய விதி சேர்ப்பு: மத்திய மோட்டர் வாகன சட்டத்தில் மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு அமலாக்கம் (167 ஏ) எனும் புதிய விதி சேர்க்கப்படுகிறது. அதன்படி, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற,உடலில் பொருத்தும் கேமரா, வேகத்தை அறியும் கருவி, ஏஎன்பிஆர் கேமரா, டேஷ்போர்டு கேமரா போன்ற மின்னணு அமலாக்கக் கருவியைப் பயன்படுத்தி அபராதம் விதிக்கலாம்.
இவற்றை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிகஅளவு விபத்து ஏற்படும் இடங்களிலும், அதிக நெரிசலான பகுதிகளிலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டமக்கள் வாழும் பகுதிகளில் (சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உட்பட) உள்ள முக்கிய சந்திப்புகளிலும் பொருத்த வேண்டும்.
இதன்மூலம் பெறப்படும் காட்சிகளில் விதிமீறல் நடைபெற்ற இடம், நேரம், நாள் போன்றவற்றையும் பதிவு செய்து, அபராதரசீதைப் பிறப்பிக்க வேண்டும். வேக வரம்பை மீறுதல், வாகனநிறுத்தமில்லா இடத்தில் வாகனங்களை நிறுத்துதல், போதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருத்தல், தலைக்கவசம் அணியாமல் இருத்தல் உள்ளிட்ட 12 விதிமீறலின் கீழ் அபராதம் விதிக்க முடியும்.
அதே நேரம், குறிப்பிட்ட பகுதி மின்னணு அமலாக்கக் கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுவதைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சாலைகளில் வைக்கப்படும் எச்சரிக்கை வாசகங்கள் தெளிவாக இடம்பெற்றிருப்பதையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தங்கள் உடலில் வெளிப்படையாக கேமராவை பொருத்த வேண்டும். அதில் பதிவாகும் காட்சிகளை நீதிமன்றங்களில் சாட்சியாகச் சமர்ப்பிக்கலாம்.
மேலும் அதிகாரிகள் சட்டத்தைப் பின்பற்றி அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பணியில் இருக்கும்போது மட்டுமே உடலில் கேமரா பொருத்தி, அதைச் செயல்படுத்த வேண்டும். கண்காணிக்கப்படும் நபர்களுக்கும் அதனைத் தெரியப்படுத்த வேண் டும்.
15 நாட்களுக்குள் அபராதம்: விதிமீறலுக்கான தெளிவான ஆதாரங்களோடு மின்னணு முறையில் மட்டுமே 15 நாட்களுக்குள்ளாக அபராதம் விதிக்க வேண்டும். தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக் கொண்டு, இணைய வழியிலோ போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதத் தொகையை செலுத்திக் கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட விதிமீறலை வாகன உரிமையாளர் செய்யவில்லை என்றால் அதற்கான ஆதாரங்களோடு பொறுப்பு அதிகாரியிடம் உரிமையாளர் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.