காஷ்மீரில் இந்து – இஸ்லாமிய மத நல்லிணக்கம்

93 0

காஷ்மீர் பெரும்பாலும் பூமியின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படுகிறது. அதன் இயற்கை அழகுக்காக மட்டுமல்ல, அதன் தனித்துவமான கலாசாரம், மதம் மற்றும் மத நல்லிணக்கத்துக்காகவுமே அவ்வாறு அழைக்கப்படுகின்றன. இதற்கு ஓர் உதாரணமாக, வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள த்ரேகாம் கிராமத்தை காணலாம்.

அங்கு ஒரு பெரிய மசூதி ஓர் இந்துக் கோவிலுடன் பொதுவான முற்றத்தை பல தலைமுறைகளாக பகிர்ந்துகொண்டிருக்கிறது. த்ரேகாம் என்பது இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும்.

இது மாநிலத்தின் வடமேற்கு பகுதியில், இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்த இடம் இது. காஷ்மீரின் கலாசாரம் மற்றும் மத மரபுகள் இஸ்லாமிய, இந்து, பௌத்த தாக்கங்களின் கலவையாகும். அனைத்து மதத்தினராலும் போற்றப்படும் பல கோவில்கள் அங்கே உள்ளன. த்ரேகாமில் உள்ள மசூதி மற்றும் கோவில் ஆகியவை இந்த ஒத்திசைவான கலாசாரத்துக்கு விதிவிலக்கல்ல.

மசூதியின் முற்றத்தில் காஷ்மீரில் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இருவராலும் போற்றப்படும் சூஃபி துறவி சையத் இப்ராஹிம் புகாரி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். மறுபுறம், இந்த கோயில் இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்றான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவரை சைவர்கள் உயர்ந்த கடவுளாக வணங்குகிறார்கள்.

ஊர் பெரியவர்களின் கூற்றுப்படி, இந்த இரண்டு வழிபாட்டுத் தலங்களும் அருகருகே கட்ட முடிவு செய்யப்பட்டது. உள்ளூரில் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் அப்போது எடுக்கப்பட்டது.

இச்சமூகம் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் செய்தியை உலகின் பிற பகுதிகளுக்கு அனுப்ப விரும்புகிறது.

இந்நிலையில், த்ரேகாம் மக்களுக்கு மசூதியும் கோயிலும் வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல என்று இஸ்லாமிய மத தலைவர் இமாம் பீர் அப்துல் ரஷித் கூறினார்.