என்ன செய்யப்போகின்றோம்? – அகரப்பாவலன்.

201 0

முள்ளிவாய்க்காலின்
அவலங்களின் எண்ணிக்கை
விண்ணின் விரிவைத் தொடும் ..
நினைக்கும் பொழுது
நெஞ்சம் பதறும்
மனவெளியில்
தீச்சுவாலை வீசும்
ஒன்றா! இரண்டா! – அது
இனவழிப்பின் உச்சமல்லவா!

அந்தக் கொடூரத்தை
அனுபவித்து தீயில் வெந்தவர்கள்
வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்..
எஞ்சியவர்கள்
சொந்தங்களையும்
சொத்துக்களையும் இழந்து
நடைப்பிணமாக வாழ்கின்றனர்..

நினைவு நாளில்
பூப்போட்டு தீபமேற்றி
வணங்கத்தான் முடியும்..
மாண்டவர் வருவாரோ?
காணாமல் போனோர்
கிடைப்பாரோ?
ஆண்டுகள் தொடர்கின்றன..
ஏக்கமும் தொடர்கின்றது..

நிர்வாணப்படுத்தி
முழங்காலில் நிற்க வைத்து
பிடரியில் சுட்ட காட்சியின்
நிழல் படத்தைப் பார்த்த
புலம்பெயர்ந்த சகோதரன் ஒருவன்
துடி துடித்து அழத்தான் முடிந்தது..

என்ன செய்யப்போகிறோம்?
இன்னும் நண்டுச் சட்டியில்
நண்டுகள் இழுக்கும் கதையாய்
வாழப் போகிறோமா? – இல்லை
உலக அரங்கில்
ஒன்று கூடித் திரளப்போகிறோமா?

நம்மை நாம்தான்
விடுவிக்க முடியும்..
நமது விடியல் நம் கையில்
ஒன்றிணைவோம்
நின்று வெல்வோம்.
-அகரப்பாவலன்-