தேசமே நிறை
போர்க்களமானது..!
படர்ந்து விரிந்த
தானைகள் தகர்த்தொரு
நேரிய போர்வழியில்
தமிழர்படை
வேகமெடுத்தாடியது…!
தலைவனின் சேனைகள்
செம்பொறி கக்க
கணைகளால்
சீற்றமெடுத்து
களமாடி நின்றன..!
கையாலாகாத் தனத்திலே
துவண்ட ஈனர்கள்
வரம்புகள் மீறின…!
உலகியல் நவீனங்களை
தாராளமாய்க் கொண்டே
மக்களை
இலக்கில் நாணேற்றி
கொன்றன குவியலாய்!
தவழ்ந்து விளையாடிய
மண்ணிலே
துவண்டு விழுந்தன
பச்சிளம் குஞ்சுகளும்…!
கூன் விழுந்த
முதியோரும் பகை
நெருப்பிலே
கருகின பரிதாபமாய்..!
பாலூட்டும் தாயவழும்
பருவமெய்திய
புன்னகை வெட்கம்
கொண்டோருமாய்
அகழியிலே
அல்லல்ப்பட்டனர்…!
பள்ளிசெல்லும்
பருவமுணர்த்தும்
பூஞ்சிட்டுக்களின்
மென்மைச் சிறகுகள்
விறைப்பின்றியே
அகற்தப்பட்டன…!
வழிபாடுகள் இல்லை
வாசிப்பு இல்லை
விளையாட்டு இல்லை
தாராள வளங்களின்
பேராளும் தகமைகள்
ஒன்றுமே இல்லை….!
அள்ளிக் கொடுத்த
கடலன்னையின்
கரையிலே
அள்ளிக் குவித்த
உயிரற்ற உடல்கள்…!
பாடை கட்டாமலும்
பறை முழங்காமலும்
வீதியோரங்களில்
விதைக்கப்பட்ட
ஊதிப் பெருத்த
உறவுகளின் ரணங்கள்..!
உணவின்
களஞ்சியமாய்..
விளைபொருளின்
இருப்பிடமாய்
உருத்தெரிந்த
வன்னிமண்
உருக்குலைந்து
ஒரு நேரக் கஞ்சிக்காய்
தெருவோரம்
தவமிருந்தது…!
குண்டுகளால் கிழிபட்டு
அரைகுறையாய்
அந்தரித்த
நிலைதன்னைக்
கண்டபோதும்…
காப்பாற்ற வழியின்றி
கடந்தே சென்ற
இழி நிலை…!
என்று மறப்போம்
அந்தத் தருணங்களை
எதை மன்னிப்போம்
கொன்று தின்றோரை…!
கண்கள் குளமாக
நெஞ்சம் மிகை முட்ட
இன்னும் நடக்கிறோம்
நீதி ஒன்று
கிடைத்திடுமென்ற
நம்பிக்கைத்
திசைநோக்கி.
-இரா. செம்பியன்-