IMF பிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு!

106 0
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், சர்வதேசநாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (15) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரைச் சந்தித்தனர்.

இவ்வாண்டின் இறுதியில் முதலாவது மீளாய்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வழமையான ஆலோசனைகளின் ஓர் அங்கமாகவே சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவின் இலங்கைக்கான விஜயம் அமையப் பெற்றுள்ளது.

நாட்டின் நிலவும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக விரிவாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர், சலுகை அடிப்படையில் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு உதவுமாறும் சம்பந்தப்பட்ட தூதுக் குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக வருமான வரி அதிகரிப்பு காரணமாக நாட்டு மக்கள் தாங்க முடியாத அழுத்தத்திலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது குறித்து கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவின் பிரதானிகளான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர்ஹாசிம், எரான் விக்கிரமரத்ன அடங்களாக பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், நாலக கொடஹேவா, நிரோஷன் பெரேரா, ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.