“2024 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவிலிருந்து 28 எம்பிக்கள் பாஜகவிலிருந்து வரத்தான் போகின்றனர். ராகுல் காந்தியின் கண் முன்னாலேயே இது நடக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பதியில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கர்நாடக தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “காக்கை உட்கார பனங்காய் விழுந்ததாக தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். கர்நாடகாவைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சியாக பாஜக இருந்தது. அதன்பிறகு மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. மாற்றத்தைக் கொடுத்துள்ளனர்.
அந்த மாநிலத்தில் சித்தராமையா, சிவக்குமார் உள்ளிட்டோர் இருக்கின்றனர். ஆனால், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்ததால்தான் வெற்றி பெற்றோம் என்று கூறியிருப்பது உண்மை இல்லை என்று அவர்களுக்கே தெரியும்.
அடுத்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வென்று இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். அதுமட்டுமல்ல, இதே கர்நாடகாவில் 28 எம்பிக்களில் 25 எம்பிக்கள் உள்ளனர். 28-க்கு 28 எம்பிக்கள் பாஜகவிலிருந்து 2024-ல் வரத்தான் போகின்றனர். இது ராகுல் காந்தியின் கண் முன்னாலேயே நடக்கும்” என்று அவர் கூறினார்.