நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மருந்தொன்றின் பாவனையால் 10 பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் கண்களுக்கு இடப்பட்ட மருந்து தொடர்பிலும், அதன் பின்னர் ஏற்பட்டுள்ள பார்வை குறைபாடு தொடர்பிலும், சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வாறான பாரதூரமான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதற்கு சுகாதார அமைச்சினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நுவரெலியா பொது வைத்தியசாலையில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மகேந்திர செனவிரத்ன, இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருந்தொன்றில் காணப்பட்ட கிருமி தொற்று காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறு பார்வை குறைபாடு ஏற்பட்டவர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.