மலையகத்தின் 200 வருட கால வரலாற்றை 25 மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வோம்

104 0

மலையகம் -200 என்ற தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் 19,20 மற்றும் 21 ஆகிய தினங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பெருந்தோட்ட மக்கள் கலந்துக் கொள்ள வேண்டும்.மலையகத்தின் 200 வருடகால வரலாற்றை நடமாடும் அருங்காட்சியகம் ஊடாக 25 மாவட்டங்களுக்கு கொண்டு செல்வோம் என கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் முத்துலிங்கம் தெரிவித்தார்.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் திங்கட்கிழமை (15)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு  தொழில் நிமித்தம் அழைத்து வரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை அண்மித்துள்ளது.காலம் மாறினாலும் மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்றும் திருப்தியளிக்க கூடிய அளவுக்கு முன்னேற்றமடையவில்லை.

கல்வி,சுகாதாரம்,அரசியல் ஆகிய அடிப்படை காரணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் லயன் வாழ்க்கை இன்றும் ஒரு நினைவு சுவடாகவே காணப்படுகிறது.200 ஆண்டுகாலத்தை முன்னிட்டு எதிர்வரும் 19,20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் நுவரெலியா மாவட்டத்தில் ‘மலையகம் -200’ என்ற தொனிப்பொருளின் கீழ் விசேட மூன்று நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கடந்த 200 ஆண்டுகாலமாக மலையக மக்கள் கடந்து வந்த பாதைகள்,நிகழ்கால தன்மை மற்றும் எதிர்கால அபிலாசைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த மூன்று நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட இராஜதந்திரிகளுககு அழைப்பு விடுத்துள்ளோம்.மூன்று நாள் செயற்திட்ட நிகழ்வில் மலையகத்துக்கான எதிர்காலம் தொடர்பில் விரிவான கருத்தாடலை நிகழ்த்தவுள்ளோம்.அத்துடன் 21 ஆம் திகதி பல தீர்மானங்களை வெளிப்படுத்துவோம்.

மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்க்கை சுவடுகளை எடுத்துக்காட்டும் வகையில் எதிர்வரும் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு தேசிய நூதனசாலைக்கு அருகில் நடமாடும் அருங்காட்சியகத்தை அமைக்க தீர்மானித்துள்ளோம். அத்துடன் எதிர்வரும் மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை நாடமாடும் அருங்காட்சியகத்தை 25 மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளோம்.

மலையகத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் பொது மக்களிடமிருந்து கையெழுத்துக்களை பெறவுள்ளோம்.பெருந்தோட்ட மக்கள் அனைவரும் இந்த மூன்று நாள் நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றார்.