வடிவேல் சுரேஷ் , பி.ஹரிசன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானம்

104 0

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஞாயிற்றுக்கிழமை (14) அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் , ‘இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹரின் செயற்படும் அதே வேளை, அதன் பொதுச் செயலாளராக நான் பதவி வகிக்கின்றேன்.

இருவரும் இருவேறு கட்சிகளிலிருந்து தனித்து செயற்படுவதை விட ஒன்றித்து பயணிப்பதே சிறப்பானதாகும். எனவே நாம் எதிர்காலத்தில் ஒன்றிணைந்தே பயணிப்போம்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடனேயே தேர்தலிலும் போட்டியிடுவேன். ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்றேன்.

எனவே உரிய நேரம் வரும் போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வரலாற்றில் முதன் முறையாக பதுளை மாவட்டத்துக்கு கிடைத்துள்ள காணி அமைச்சினை பயனுடையதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’ என்றார்.

இதேவேளை, கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன், கட்சியின் உபதலைவர் பதவியிலிருந்தும், ஏனைய அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்வதாகவும் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது ஆட்சி பொறுப்பினை ஏற்காது , தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திக்கும் சுயநல சிந்தனை கொண்டவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச என்றும் பி.ஹரிசன் குறிப்பிட்டார்.

எனவே இனிவரும் காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.