முற்றுகை முடக்கத்துள் துடி துடித்த மக்கள் ! அகரப்பாவலன்.

209 0

சுற்றி வளைத்து
பல்குழல் குண்டுகள்
சரமாரியாக பாய்கின்றது..

சிங்கள வான் பறவைகள்
சர்வதேசக் குண்டுகளை
சணத்துக்குச் சணம்
ஏவுகின்றது..

வன்னிமண்ணின்
பகுதிகளெங்கும்
ஓலக்குரல்கள்
ஓங்கி ஒலிக்கின்றது..

பசுமை நிறைந்த
வன்னி மண் இரத்தத் சிவப்பாய்
மாறுகின்றது..

எங்கு ஓடுவது..
எங்கு ஆறுவது?
எங்கு ஒழிவது?
யார் யாரைக் காப்பது?
சொற்ப பதுங்கு குழிக்குள்
எத்தனை பேரை அடக்குவது?

செத்த சொந்தங்கள்
விரவிக் கிடைக்க!
சித்தம் கலங்கி
துடித்து நிற்க!
பாசமனங்கள்
நொறுங்கிச் சிதற
வலிகளைச் சுமந்தபடி
வழி தேடி ஓடினர் மக்கள்..

அப்பொழுதுதான்
அந்த அரக்கத்தனம்
நடந்தேறியது..

மானத்தை உயிராய் மதித்த
நம் பெண்களை
அவமானப்படுத்தும்
இழி செயல் நடந்தேறியது..

காமுகர்களின்
கழுகுப் பார்வையில்
நம் சகோதரிகள்
கூனிக் குறுகி
நின்ற நேரம்..

வரிசை கட்டி
வரச்சொல்லி
கூடிச் சிரித்து
கேவலப்படுத்தியதை
மறப்போமா?

இவர்கள்
இனவெறியர்கள் மட்டுமல்ல..
மனநோயாளிகள்..
மனதை சாக்கடையில் தோய்த்த
மனப்பிறழ்வு கொண்டவர்கள்..

பதினான்கு ஆண்டுகள்
ஆனாலென்ன!
பத்தாயிரம் ஆண்டுகள்
ஆனாலென்ன!
இவர்களின் மரபணுக்கள் மாறாது!

நம்மை மீட்க
ஒற்றுமைப் பலம் வேண்டும்!
விலைபோகா திடம் வேண்டும்!
முடிந்த முடிவில் உறுதி வேண்டும்!
தலைவன் வழி இணைய வேண்டும்!
-அகரப்பாவலன்-