அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் புலன்மொழிவளத்தேர்வு 14-05-2023 ஞாயிற்றுக் கிழமையன்று மிகவும் சிறப்பாக டென்மார்க்கில் நடைபெற்றது. இத்தேர்வு இருபத்தேழு (27) நகரங்களிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில் நடைபெற்றது.
ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையான வகுப்புகளைச் சேர்ந்த 500 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வுக்கு தோற்றியிருந்தனர். இவ்வாண்டு தமிழ்மொழிக்கான கேட்டல் திறன் மற்றும் பேசுதல் திறனுக்கான தேர்வுகளாக இத் தேர்வுகள் இடம்பெற்றன.
பேசுதல் திறனுக்கான தேர்வுக்கு உள்ளே சென்று வந்த மாணவர்கள் மகிழ்ச்சியாக சிரித்த முகத்துடன் வெளியே வருகை தந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அதேபோன்று கேட்டல் திறனுக்கான தேர்வுக்கு சென்ற மாணவர்கள் மகிழ்வாகவும் உற்சாகமாகவும் உள்ளே சென்றனர். ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் அனைவரும் ஒன்றாக கேட்டல் தேர்வுக்குச் சென்றமை மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.