மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகளில் அம்பாறை மாவட்டத்தில் அனைவரும் தயக்கமின்றிக் கலந்து கொள்ளலாம் என சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன் குறிப்பிட்டார்.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (15) கல்முனையில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற போது அங்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்
அம்பாறை மாவட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் மே 18 தமிழர் இனவழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதனடிப்படையில் எதிர்வரும் மே 16 மற்றும் மே 17 ஆம் திகதிகளில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியிலுள்ள பிரதான வீதிகளில் இந்நிகழ்வுகளை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இந்த நிகழ்வுகள் யாவும் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் அனுபவித்த துயரங்கள் படுகொலைகள் அந்த நேரம் உணவுக்காக அவர்கள் பட்ட கஸ்டங்கள் அந்த நேரம் அவர்கள் உணவாக உட்கொண்ட அரிசியையும் நீரையும் கலந்து அவித்து பருகிய கஞ்சி உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் மேற்படி கூறிய தினங்களில் காட்சி படுத்தவும் வழங்கவும் காத்திருக்கின்றோம்.
இதன் நோக்கமானது கடந்த யுத்தத்தின் போது எமது மக்கள் அனுபவித்த வேதனைகளை தற்போதைய சந்ததிகள் அறியவும் இச்செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.
எனவே அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகளில் சிறப்பிக்கவும் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யவும் அன்புரிமையோடு அழைப்பதுடன் அனைத்துப் பாதுகாப்பு அனுமதிகளையும் பெற்று ஒழுங்கு செய்துள்ளதால் உறவுகள் அனைவரும் தயக்கமின்றி இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றொம் என்றார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான என். தர்சினி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.