யாழில் சிறுவர்களை உள்ளடக்கிய வன்முறை கும்பல் ; இருவர் கைது

128 0

யாழ்ப்பாணத்தில் வட்ஸ் அப் குரூப் ஊடாக ஒன்றிணைந்திருந்த வன்முறை கும்பல்களை சேர்ந்த இருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால்  ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் முதல் 23 வயது இளைஞர்கள் வரையிலான சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து வன்முறை கும்பல் ஒன்றாக தம்மை சமூக ஊடகங்கள் ஊடாக அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.

குறிப்பாக டிக்டொக் செயலியில் வாளுகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடனும், நவீன ரக மோட்டார் சைக்கிள்களுடனும் வீடியோக்கள், படங்கள் என்பவற்றை பதிவேற்றி, யாழில் இயங்கும் மற்றைய வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் காணொளிகளை பதிவேற்றி வந்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ். மாவட்ட குற்றதடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்து காணொளிகளில் உள்ளவர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களை கைதுசெய்தவற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை திங்கட்கிழமை (15) அரியாலை பூம்புகார் பகுதியில் மறைந்திருந்த இருவரை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , தமது குழுவை சேர்ந்தவர்கள் வட்ஸ் அப் குரூப் ஊடாகவே தொடர்புகளை பேணுவதாகவும், தாம் இதுவரையில் எந்த வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடவில்லை எனவும் , பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய தாம் கல்வியை தொடர முடியாது , வேலைகளுக்கும் செல்லாது வீட்டில் தங்கி வாழ்கிறோம் எனவும் தெரிவித்துள்னர்.

குறித்த கும்பலுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்டவர்களை தாம் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை யாழில் இயங்கும் வன்முறை கும்பல்கள் , வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருவதனால் , அவற்றை பார்க்கும் வெளிநாட்டில் உள்ள நபர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுடன் ஏற்படும் முரண்பாடுகளுக்கு இந்த குழுக்களை கூலிக்கு அமர்த்தி வன்முறைகளில் ஈடுபடுத்து வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.