அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் தனது காதலி கருக்கலைப்பு செய்ததற்காக துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 22 வயதான ஹரோல்டு தாம்ப்சன், 26 வயதான கேப்ரியல்லா கொன்சேல்ஸ்-ஐ கொலை செய்தார் என்று டல்லாஸ் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெக்சாசில் இருந்து சுமார் 800 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் கொலராடோவுக்கு பயணம் செய்த கொன்சேல்ஸ் அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டார். கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
கருவுற்று ஆறு வாரங்கள் ஆனவர்கள், மருத்துவ அவசர நிலையின்றி தாமாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது டெக்சாஸ் மாகாணத்தில் சட்டரீதியில் குற்ற செயல் ஆகும். சம்பவத்தன்று கொன்சேல்ஸ்-ஐ சந்தித்த தாம்ப்சன் அவரிடம் சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பின் தாம்ப்சன், கொன்சேல்ஸ் கழுத்தை நெறிக்க தொடங்கியுள்ளார். கொன்சேல்ஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல முயன்றிருக்கிறார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த தாம்ப்சன் கொன்சேல்ஸ் தலையில் சுட்டார்.
ஏற்கனவே பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ தாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. காதலியை கொலை செய்த தாம்ப்சனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.