நில வழிகாட்டி மதிப்பை அதிகரித்து மோசடி – அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடர அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

121 0

சுங்கச்சாவடி அமைக்க கையகப்படுத்திய நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை 10 மடங்கு அதிகரித்து காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் சுங்கச்சாவடி அமைக்க, கடந்த 2018-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 6 ஆண்டுகள் கடந்தும் அந்த நிலத்தை ஆணையம் இன்னும் பயன்படுத்தவில்லை.

இந்த நிலையில், நிலத்தை பயன்படுத்த தங்களுக்கு அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சட்டப்படி இழப்பீடு கோரி நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் சமீபத்தில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், ‘குறிப்பிட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை தமிழக அரசு அதிகாரிகள் மோசடியாக 10 மடங்கு அதிகரித்து காட்டியுள்ளனர். இதன் விளைவாக, சுங்கச்சாவடி அமைக்க ரூ.500 கோடி செலவாகும் என்பதால், உரிமையாளர்களிடம் நிலத்தை திருப்பி ஒப்படைக்க உள்ளோம். எனவே, நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்வதில் ஆட்சேபம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘நிலம் கையகப்படுத்துவதற்காக கடந்த 2018-ல் பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. நிலத்தை உரிமையாளர்களிடம் 2 வாரங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்படைக்கலாம். அதேபோல, வழிகாட்டி மதிப்பீட்டை 10 மடங்கு அதிகரித்து காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு தடையாக இருக்காது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.