தாய்மையை தாங்கி நிற்கும் சட்டங்கள்

148 0

ன்றாள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.(656)

என்பது திருக்குறள். இக்குறள் தீயதை ஒரு மனிதன் எச்சந்தர்ப்பத்திலும் செய்யக்கூடாது என்று இடித்துரைக்கின்றது. இதனால்தான் தனது தாய் பசியோடு இருப்பதைக் கண்டால்கூட அப்பசியை தீர்ப்பதற்கு சான்றோர் பழிக்கின்ற வினையை செய்யக்கூடாது என்கிறார். இதிலிருந்து ஒரு மனிதன் எதைச் செய்யாவிட்டாலும் கூட தாய்க்காக எதையும் செய்யத்துணிவான் என்பது புலனாகின்றது.

தாயன்புக்கு நிகரானதும் தாய்ப்பாலுக்கு நிகரானதுமான எந்தவொரு பொருளும் உலகில் இல்லை எனலாம்.

பிரதிசெய்ய முடியாததாகவும் உவமையில்லாததாகவும் கடைதன்னில் சாதாரணமாக கிடைத்துவிட முடியாததாகவும் சிறந்து விளங்குவது தாயன்புதான். இதற்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும், தாய் என்கின்ற நபருக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து கிடைத்துவிடுகிறதா?

இக்கட்டுரையானது தாய்மாருக்குரிய உரிமையை எடுத்தியம்புகின்ற வகையில் இலங்கையில் காணப்படும் சட்ட ஏற்பாடுகள் பற்றி ஆராயத் தலைப்படுகிறது.

வாழ்நாள் முழுவதிலும் ஓய்வின்றிய ஒரு தொழிலாளியாக தாய் வீட்டில் உழைத்துக்கொண்டேயிருக்கிறாள்.

மொத்த தேசிய உற்பத்தியில் தாயின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தாய்மையை பேணுவதில் உள்ள சட்ட ஏற்பாடுகளை பார்க்கின்ற போது இலங்கையில் அடிப்படைச் சட்டமாகவும் மீயுயர் சட்டமாகவும் காணப்படுகின்ற இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அத்தியாயம் மூன்றான அடிப்படை உரிமைச்சட்டத்தில் உறுப்புரை 12(4)இல் சட்டத்தின் முன் யாவரும் சமனாகிலும், பெண்களுக்கென்ற சிறப்புச் சட்டங்கள் ஆக்கப்பட்டு இவர்களின் நலன் பேணப்படவேண்டும் எனவும் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தின் பார்வையில் பெண்கள் நலிந்தவர்களாகையால் பெண்களின் உரிமையை  பேணிப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசிடம் காணப்படுகிறது. ஆகவே, பெண் என்கின்ற பெரும் வகுதிக்குள் தாய் என்பவள் சட்டத்தால் காக்கப்படவேண்டியவள்.

மேலும், இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையில் தாய்மாருக்கு சிறப்பான ஏற்பாடு காணப்படுகின்றது.

கொலை எனும் குற்றம் எப்போதெல்லாம் தண்டனைக்குரிய மனித உயிர் போக்கலாக அமையாது எனில்,  ஒரு தாய் தனது குழந்தையை பிறந்து ஒரு வருட காலத்துக்குள் கொலை செய்தால் கூட அது தண்டனைக்குரியதல்ல. இங்கு தாய் தன் குழந்தையை கொலை செய்தல் என்பது ஒரு தாயின் உரிமை என்று தவறாக பொருள் கொள்ளக்கூடாது.

இங்கே குறிப்பிடப்படும் விடயம் என்னவென்றால், குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு வருடத்தில் பெண் பல்வேறுபட்ட உளவியல் தாக்கங்களுக்கும் ஹோர்மோன் சமமின்மைக்கும் ஆளாகுவதால், தான் பெற்றெடுத்த குழந்தையைக் கூட கொல்வதற்கு சந்தர்ப்பம் இருப்பதால், அது குற்றமாகாது என்பது மருத்துவ முடிவு. அதாவது ‘குற்றமனமின்றிய செயல்’ இங்கே நடைபெறுகிறது. இதனால்தான் சட்டம் அவளைப் பாதுகாக்க முனைகிறது. இது தாய் தொடர்பில் காணப்படுகின்ற சிறப்பான ஏற்பாடாகும்.

இதனையே தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 294இன் பிரகாரம் குற்றத்துக்கு இடமான மனித உயிர்ப் போக்கல் எப்போது கொலையாகாது என்கின்ற விதிவிலக்குகளில் தவறாளர் 12 மாதங்களுக்குட்பட்ட பிள்ளையொன்றின் தாயாய் அப்பிள்ளையைப் பெற்ற நோவிலிருந்து முற்றாக குணமடையாத காரணத்தினால் அல்லது அப்பிள்ளை பிறந்ததன் மீது பாலூட்டலின் விளைவான காரணத்தினால் அவளின் மனம் நிலை குலைந்திருக்கும்போது அதன் மரணத்தை விளைவித்தால் குற்றத்துக்கு இடமான மனித உயிர்ப் போக்கல் கொலையாகாது என குறித்துரைக்கிறது. இது தாய்மாரின் உடல் உளநிலையை கருத்திற்கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடாகும்.

மேலும், 2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டமானது தாய்மாருக்கு பலத்த பாதுகாப்பை வழங்குகின்றது.

குடும்ப வன்முறைச் செயலை தடுப்பதற்கு இச்சட்டமானது இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 2(1)இன்படி, குடும்ப வன்முறைச் செயலொன்று புரியப்பட்டதோ புரியப்படுகின்றதோ அல்லது புரியப்படும் சாத்தியமுள்ளதோ, அத்துன்புற்ற நபர் வன்முறைச் செயலை தடுப்பதற்காகவும் தனது பாதுகாப்புக்காகவும் நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றைச் செய்ய முடியும். ஆயினும், பிரிவு 8இன்படி இவ்வாறான பாதுகாப்புக் கட்டளையை ஆக்கும்போது குடும்ப வன்முறையை தடுப்பதற்கான தேவை, துன்புற்ற நபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தேவை என்ன என்பதனை மன்று கருத்தில் எடுத்தே கட்டளை வழங்கவேண்டும்.

மேலும், இச்சட்டத்தின் பிரிவு 11இன் பிரகாரம், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட நபருக்கு மன்று பின்வரும் இடைக்காலக் கட்டளை அல்லது பாதுகாப்புக் கட்டளையை வழங்கமுடியும். அவையாவன:

பாதிக்கப்பட்ட நபரும் பாதிப்பை உருவாக்கிய நபரும் வாழ பயன்படுத்தும் வீட்டுக்குள் பாதிப்பை உருவாக்கிய நபர் உள்நுழைவதனை தடுப்பதற்கும், துன்புற்ற நபரின் வதிவிடம், தொழில் இடம், பாடசாலை போன்றவற்றுக்குள் நுழைவதை தடுப்பதற்கும், துன்புற்ற ஆள் தற்காலிகமாக தங்கியிருக்கும் இடத்துக்குள் நுழைவதை தடுப்பதற்கும், துன்புற்ற ஆள் சாதாரணமாக வசித்துவரும் இடத்துக்குள் நுழைவதனைத் தடுப்பதற்கும், துன்புற்ற ஆளுடன் சேர்ந்து வாழ்வதனை தடுப்பதற்கும், துன்புற்ற ஆளின் பிள்ளையுடன் பாதிப்பை உருவாக்கும் நபர் தொடர்பு வைத்திருப்பது பிள்ளையின் நலனுக்கு குந்தகம் விளைவிப்பதாயின், அத்தகைய பிள்ளையுடன் தொடர்பு வைப்பதில் இருப்பதிலிருந்து துன்புற்ற ஆள் சேர்ந்து அனுபவிக்கும் மூல வளங்களைப் பயன்படுத்துவதனை அல்லது அணுகுவதை தடுப்பதிலிருந்து, துன்புற்ற ஆளுடன் எப்படியேனும் தொடர்பு வைப்பதிலிருந்து அல்லது தொடர்பு வைக்க முனைவதிலிருந்து அல்லது துன்புறும் நபருக்கு உதவி புரியும் இன்னொரு நபருக்கு எதிராக வன்முறைச் செயல்கள் எதையும் செய்வதிலிருந்து தொல்லை விளைவிப்பதற்காக துன்புற்ற ஆளை சுற்றிப் பின்தொடர்வதிலிருந்து துன்புற்ற ஆளை அநாதியாக்குவதற்காக திருமண வீட்டை விற்பதிலிருந்து, கைமாற்றுவதிலிருந்து, பாராதீனப்படுத்துவதிலிருந்து அல்லது பாரபந்தைக்கு உட்படுத்துவதிலிருந்து பிரதிவாதியை தடை செய்யலாம்.

ஆயினும், இத்தகைய கட்டளையை ஆக்குவதில் துன்புற்ற ஆளின் பிள்ளைகள், பாதிப்பை ஏற்படுத்திய நபரின் பிள்ளைகளின் தங்கிட வசதிக்கான தேவை, கட்டளையின் நிமித்தம் பாதிக்கப்பட்டவருக்கு, அவரோடு தொடர்புடைய ஆளுக்கு விளைவிக்கப்படக்கூடிய இக்கட்டு போன்றவற்றையும் மன்று கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என இச்சட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறு நோக்கும்போது, அநேகமாக குடும்ப வன்முறையால் அதிகளவு பாதிக்கப்படுவதனாலும், குடும்பம் என்கின்றபோது துன்புற்ற ஆளாக தாய் காணப்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுவதனாலும் 2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டமானது தாய்மாரை பாதுகாக்கின்ற சட்டமாக காணப்படுகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மேலும் தாய்மாரை பாதுகாக்கின்ற மற்றுமொரு சட்டமாக தொழிலாளர் சட்டம் காணப்படுகிறது. இதில் 1939ஆம் ஆண்டினது மகப்பேறு நன்மை கட்டளைச்சட்டம் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இச்சட்டத்தின்படி மகப்பேற்றுக் காலத்தின் விடுமுறைகள் பற்றிய ஏற்பாடுகளை நோக்கும்போது பிரிவு 2இன்படி, வாராந்த விடுமுறைகள் போயா விடுமுறைகள் மற்றும் சட்ட ரீதியான விடுமுறைகள் நீங்கலாக மகப்பேற்றின் விடுப்பின் காலம் 12 வாரங்களாகும். அதாவது 84 நாட்கள் ஆகும். 1954ஆம் ஆண்டின் கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தின் பிரிவு 18(ஆ)இன் பிரகாரம், விடுமுறை 70 நாட்களாகவும் மற்றும் அவர்கள் கடை மற்றும் அலுவலகப் பணியாளராக இருக்கும் பட்சத்தில் உயிருடன் குழந்தை பிறக்கவில்லையாயின் விடுப்பு 28 நாட்களாகவும் காணப்படுகின்றது.

1939ஆம் ஆண்டினது மகப்பேறு நன்மை கட்டளைச்சட்டத்தின் பிரிவு 10இன்படியும் 1954ஆம் ஆண்டின் கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தின் பிரிவு 18இன் படியும் ஒரு பெண் மகப்பேற்று விடுப்பு நிறைவில் அதே பதவி நிலைக்கு திரும்பி வரும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இச்சட்டங்களின் பிரகாரம், கர்ப்பநிலை, பிரசவத்துக்கு பிந்திய காலப்பகுதியில் இவற்றை காரணம் காட்டி, ஒரு பெண் வேலையிலிருந்து நீக்கப்படுதலிலிருந்து பாதுகாப்பதனை உத்தரவாதம் அளிக்கின்றது.

மேலும், அவ்வாறு ஒரு தாய் மகப்பேற்று விடுப்பின் பின்னர் வேலையில் இணைக்கப்படும்போது அவளுக்கும் அவளது குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் வேலைப்பளுவை அவள் மீது திணிக்கக்கூடாது என 1939ம் ஆண்டினது மகப்பேறு நன்மை கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10(ஆ)உம், 1954ம் ஆண்டின் கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தின் 18(ஈ) உம் குறித்துரைக்கின்றது. மேலும் 2000ஆம் ஆண்டின் சுகாதார சேவைகள் சட்டத்தின் கீழ் மகப்பேறு இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கவனிப்பை வழங்குவதற்கு பொறுப்பாகும். மேலும், இச்சட்டங்கள் பாலூட்டும் உரிமைகளையும் தாய்க்கு வழங்குகின்றது. இவற்றில் 1954ஆம் ஆண்டின் கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் பாலூட்டுவதற்கு ஏற்பாடுகள் காணப்படவில்லையாயினும் 1939ம் ஆண்டினது மகப்பேறு நன்மை கட்டளைச்சட்டத்தினது பிரிவு 12(ஆ) குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை ஒன்பது மணிநேர வேலையின்போது ஒவ்வொன்றும் குறைந்தது 30 நிமிட இடைவெளியில் இரண்டு ஊதிய இடைவெளிகளை வழங்குகின்றது.

மேலும், 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் அத்தியாயம் 23ஆனது தீர்ப்பை பற்றி எடுத்தியம்புகின்றபோது பிரிவு 282இன் பிரகாரம், மரண தண்டனைக்குரிய பெண் ஒருவர்; தான் கருவுற்றிருப்பதாக சொன்னால் எந்த நீதிமன்றுக்கு முன்னால் குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்டதோ அந்நீதிமன்றம் அவர் கருவுற்றாரா, இல்லையா என்கின்ற பிரச்சினைக்கு முடிவு காணுவது உசிதமாக தோன்றும்போது அத்தகைய பிரச்சினையானது அவர் மீது தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் முன்னரே யூரர் சபை இல்லாது மேல் நீதிமன்ற நீதிபதிகளின் நீதாய விளக்கமாயின் அந்நீதிபதிகளினால் அல்லது யூரர் முன்னிலையிலான விளக்கமாயின் அப்பெண் குற்றவாளி என துணிபுரைத்த யூரர்களினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

மேலும் இச்சந்தர்ப்பத்தில் யூரர்கள் ஐந்துக்கு இரண்டு என்ற பெரும்பான்மை மூலம் உடன்பாடு காணாதிருந்தால் மன்று நீதியின் நலனைக் கருத்தில் கொண்டு பழைய யூரர் சபையை கலைத்துவிட்டு புதிய சபையை தெரிவுசெய்யுமாறு கட்டளையிடலாம்.

இவ்வாறு பெண் கருவுற்றிருப்பதானது மன்று திருப்திப்படும் வகையில் உறுதியாக எண்பிக்கப்பட்டாலன்றி பெண் கருவுற்றிருக்கவில்லை என முடிவு செய்தலும் வேண்டும்.

மேலும் 1979ம் ஆண்டின் 15ம் இலக்கக் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் பிரிவு 282(4)இன் பிரகாரம் அப்பெண் கருவுற்றிருப்பது முடிவு செய்யப்பட்டதாயின் மன்று மரண தண்டனைத் தீர்ப்புக்கு பதிலாக மறியல் தண்டனையை எடுத்து மொழிதல் வேண்டும் என்கின்ற ஏற்பாடு இலங்கையில் தாய்மைக்கு சட்டம் வழங்கும் மரியாதையை புலப்படுத்துவதன்றி வேறில்லை.

எனவே, இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் தாய்மையைப் பேணுவதற்கு தூணாக அமைந்திருக்கின்றன என்று சொல்வதில் மிகையில்லை.

சட்டத்தரணி அம்பிகை கஜேந்திரன் (LL.B)