சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கம் சந்தித்து கலந்துரையாடல்

117 0

தேசிய கடன் மறுசீரமைப்பின்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் கடன்களில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தோம் என பேராசிரியர் அனுர ஷான்த்த ஆரச்சி தெரிவித்தார்.

நாட்டுக்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின்பணிப்பாளர் கிறிஷ்னா சீனிவாசன் உட்பட பிரதிநிதிகளை சனிக்கிழமை (13) தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க பிரதிநிகளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக முடிந்ததாகவே நாங்கள் நம்புகிறோம். அரசாங்கம் புதிதாக விதித்திருக்கும் 400 வீத வரி அதிகரிப்பு தொடர்பில் நாங்கள்  அவர்களுக்கு விளக்மளித்தோம். இதன் போது அவர்கள் இந்த வரி அதிகரிப்பு ஒரேதடவையில் அதிகரிக்கப்பட்டிருப்பது தொடர்பில்  ஆச்சரியப்பட்டனர்.

வரி அதிகரிப்பால் தொழில் வல்லுநர்கள் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டத்தை எதிர்கொண்டு வருவதை அவர்கள் விளங்கிக்கொண்டதாகவே எமக்கு உணர்ந்தது.

அத்துடன் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியமே அரசாங்கத்துக்கு அதிக கடன் வழங்கி இருக்கிறது. இந்நிலையில் தேசிய கடன் மறுசீரமைப்பின்போது குறித்த கடனில் குறைப்பு செய்யப்படுவது தொடர்பாகவும்  நாங்கள் நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் கேட்டோம்.

அதற்கு அவர்கள், சர்வதேச கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் போது தேசிய கடன் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படுகிறது என்றார்கள். என்றாலும் இந்த நாட்டின் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தில் எந்த குறைப்பும் செய்யவேண்டாம் எனவும் அதேபோன்று கடன் மறுசீரமைப்பின் போது வங்கிகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு தொடர்பாகவும்  தெரிவித்தோம்.

குறிப்பாக அரசாங்கத்துக்கு அதிக கடன் வழங்கி வருவது தனியார் மற்றும் அரச வங்கிகளாகும். இந்த வங்கிகளில் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், வங்கிகளுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் நாங்கள் தெளிவுபடுத்தினோம்.

எமது கோரிக்கைகள் தொடர்பில் கவனத்தில் கொள்வதாக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது எமக்கு தெரிவித்தனர்.