திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகை தரும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக, பிரித்தோதி அனுட்டானங்களை மேற்கொண்டதால் திருகோணமலையில் இன்று (14.05.2023) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை மணிக்கூட்டுக்கோபுர அருகில் இன்று (14) சிங்கள மக்கள் மற்றும் பௌத்த தேரர்கள் தலைமை தாங்க ஊர்வலமாக வந்து நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள அடைக்கப்பட்ட பகுதிக்குள் அத்தமீறி நுழைந்து சமய அனுட்டானங்களை மேற்கொண்டுள்ளனர்.
தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் முப்படையினரின் பாதுகாப்பையும் மீறி வலுக்கட்டாயமாக நுழைந்து பௌத்த சமய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது .
இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையினர் நேற்று (13.05.2023) தொடக்கம் இன்று (14.05.2023) அதிகாலை வரை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்தியிருந்த நிலத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்ற பின்னர் மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து பௌத்த தேரர்கள் உட்பட 2000ற்கும் மேற்பட்டவர்கள் நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்து பிரித்தோதியதுடன் மக்கள் வழிப்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதுதொடர்பில், திருகோணமலை மாவட்ட செயலாளரைத் தொடர்பு கொண்டு இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.