சிறைச்சாலை அதிகாரி ஒருவரை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல்

95 0

கொழும்பு, புதிய மகசின் சிறைச்சாலையின் அதிகாரி  ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த  இனந்தெரியாத மூவர் அவரை மண்டியிடச் செய்து  அச்சுறுத்தி,  கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய மகசின் சிறைச்சாலையின் ஒழுக்கவியல் திணைக்களத்தில் இளைஞர் பிரிவுக்கான கண்காணிப்பாளராக கடமையாற்றும் குறித்த அதிகாரியின் மினுவாங்கொடை  பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மூவரால் இவ்வாறு அச்சுறுத்தல்  விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த மூவரும் அவரைத் தாக்கி மண்டியிட செய்து தலையில் துப்பாக்கியை வைத்து  கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவர்களுள் ஒருவர் “நீ சிறைச்சாலைக்கு செல்கிறாயா? அங்கு இருப்பவர்களை திருத்துவதற்கு முயற்சிக்கிறாயா? உன்னால் அவற்றை  செய்ய முடியாது. சிறைச்சாலைக்குள் போதைப் பொருட்களை கொண்டு வருவதை உன்னால் நிறுத்த முடியாது.

இவற்றில் தலையிடுவதை நிறுத்தி விட்டு வேறு வேலையை பார்த்து கொள். இதனை பொலிஸில் கூறினால் உன்னை நான் பார்த்துகொள்கிறேன்” என அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூவரில் ஒருவர் இதனை கையடகத்தொலைபேசியில் வீடியோ எடுத்து விட்டு அதிகாரியின் தலையில் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்த அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், அரச புலனாய்வுப் பிரிவினரும்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக கடந்த காலங்களில் பல வெற்றிகரமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் மீது கோபம் கொண்ட கைதி ஒருவரே இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த அதிகாரிக்கு இதற்கு முன்பும் தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்துள்ளதுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.