நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலம் தாழிறங்கல், கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் ஆகிய தன்மைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் கடற்கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் அவ்வப்போது 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், மறு அறிவித்தல் விடுக்கும் வரை வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.