புதிய ஆளுநர்களாக நவீன், செந்தில், சார்ள்ஸ், தயா ஆகியோரின் பெயர்கள் முன்மொழிவு!

165 0

ஜனாதிபதி அலுவலகத்தினால் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட நான்கு ஆளுநர்கள் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்யாவிடின், அவர்களை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்துக்கு முன்பாக ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே போன்று குறித்த நான்கு ஆளுநர்களின் இடத்துக்கு புதிய ஆளுநர்களாக நவீன் திசாநாயக்க, செந்தில் தொண்டமான், தயா கமகே மற்றும் பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல்  மாகாண ஆளுநர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதேபோன்று குறித்த மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுவரையில் எவ்விதமான பதவி விலகலோ அல்லது ஆளுநர் பதவிகளில் மாற்றங்களோ ஏற்படவில்லை.

இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகாவிடின் அவர்களை அந்த பதவிகளிலிருந்து நீக்குவதற்கான 3 வழிமுறைகள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் குழு அமைத்து, குறித்த ஆளுநர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது முதலாவது வழிமுறையாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, ஜனாதிபதியின் குறித்த மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தல் ஆகும்.

மூன்றாவதாக, நிதி ஒதுக்கீடுகளை விடுவிக்காதிருத்தல் மற்றும் குறித்த ஆளுநர்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்தல் போன்ற வழிமுறைகள் குறித்தே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, 4 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் கூடிய விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த நியமனங்களை இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஜப்பான் விஜயத்துக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கவுள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் மேலும் கூறினார்.