அரச சேவையில் நாளை முதல் விரல் அடையாளம் கட்டாயம்

143 0

அனைத்து அரச ஊழியர்களும் நாளை  திங்கட்கிழமை (15) முதல் சேவைக்கு வருகை தருவது மற்றும் சேவை முடிந்து வெளியேறிச் செல்வதை பதிவிடுவதற்காக விரல் அடையாள இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கி இருப்பதாக பொது நிர்வாக செயலாளர் ரஞ்ஜித் அசோக்க தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் சேவைக்கு வருவது, சேவை முடிந்து செல்லும்போது விரல் அடையாள இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து அரச ஊழியர்களும் தங்களின் சேவை நிலையங்களுக்கு வருகை தருதல் மற்றும் சேவை முடிந்து வெளியேறிச் செல்வதை பதிவிடுவதற்காக விரல் அடையாள இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

நாளை திங்கட்கிழமை முதல் இந்நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளது.

அத்துடன் விரல் அடையாள இயந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பான சுற்று நிருபத்தை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். அதன் பிரகாரம், 2021.10.01ஆம் திகதிய 02/2021 (ம) இன் 7ஆவது பந்தியின் ஏற்பாடுகள் நாளை முதல் செயற்படுத்தப்படுவதாக சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சுற்று நிருபத்தின் ஏற்பாடுகளுக்கமைய செயற்படுவதற்கு அனைத்து நிறுவன தலைவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த சுற்று நிருபம் அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதான செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும்  அரச கூட்டுத்தாபனங்களின் நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன என்றார்.