கடன் மறுசீரமைப்பு என்பது ஒரு சத்திர சிகிச்சையை போன்றது

116 0

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக தேசிய கடன்களை மறுசீரமைப்பது மிகக் கடினமான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள பொருளியல் நிபுணர்கள், இருப்பினும் கடன் மறுசீரமைப்பு என்பது ஒரு சத்திர சிகிச்சையை போன்றது என்றும், அதனை ஒரே முறையில் சரியாக செய்து முடிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்திட்டத்தின் கீழ், சுமார் 3 பில்லியன் டொலர் கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் எட்டப்பட்ட நிலையில், கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்றிட்டத்தை ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இருப்பினும், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அச்செயற்றிட்டம் கடந்த மாதம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் கடன் மறுசீரமைப்புச் செயற்றிட்டம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தேசிய கடன் மறுசீரமைப்பு என நோக்குகையில், மத்திய அரசாங்கத்தின் ஊடாக தேசிய சந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களையே இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் தேசிய கடன்களாக கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன, இருப்பினும் மத்திய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் கடன்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்கள், மத்திய வங்கி உள்ளடங்கலாக அரச வங்கிகள் பெற்ற கடன்கள், அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் சமூக பாதுகாப்பு நிதியங்களுக்காக பெறப்பட்ட கடன்கள் மற்றும் அரசாங்கத்தின் பரிந்துரைக்கு அமைய தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் என அனைத்தையும் அரச கடன்களாகவே கருதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி, அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ள தேசிய வருமானத்துக்கும் உண்மையான வருமானத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாகவும், இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேசிய கடன்களை மறுசீரமைப்பது கடினமான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடன் மறுசீரமைப்பை ஒரு சத்திர சிகிச்சையுடன் ஒப்பிட்டுக் காண்பித்துள்ள அட்வகாட்டா அமைப்பின் பொருளியல் ஆய்வாளர் கனிஷ்க வேரவில, “உயிரை காப்பதற்கு சத்திர சிகிச்சை இன்றியமையாதது என்பதுடன் அதனை ஒரே தடவையில் சரியாகச் செய்துமுடிக்கலாம் எனும்போதுதான் நாம் அந்தத் தெரிவுக்குச் செல்வோம். அதேபோன்றுதான் கடன் மறுசீரமைப்பின்றி பொருளாதார ரீதியில் முன்நோக்கிப் பயணிக்க முடியாது என்பதுடன் அதனை ஒரே முறையில் சீராக செய்யமுடியும் எனும்போது அத்தெரிவுக்கு செல்லவேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தற்போது நாம் தேசிய மற்றும் சர்வதேச கடன்களை மறுசீரமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில், அதனை மீண்டும் மீண்டும் பல முறை செய்யமுடியாது என்றும் ஒரே தடவையில் உரியவாறு மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.