பிரான்ஸில் நடைபெற்ற மிகச் சிறந்த பாண் தயாரிப்பாளருக்கான போட்டியில் பிரான்ஸை சேர்ந்த இலங்கையரான தர்ஷன் செல்வராஜா முதலிடம் பெற்றுள்ளார்.
பிரான்ஸின் ‘பகெட்’ (Baguette)) எனும் நீளமான பாண் பிரசித்தமான ஓர் உணவாக விளங்குகிறது. ‘பாரம்பரிய பகெட்’ என அடையாளப் படுத்தப்படக்கூடிய பாண் எப்படி தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு 1993 ஆம்ஆண்டில் பிரெஞ்சு பாராளுமன்றம் சட்டமொன்றையே இயற்றியது.
பாரிஸில் இவ்வகையான மிகச் சிறந்த பாணை தயாரிப்பதற்கு வருடாந்தம் போட்டி நடத்தப்படுகிறது. ‘பாரிஸின் மிகச் சிறந்த பாரம்பரிய பிரெஞ்சு பகெட் க்றோன் ப்றீ ‘ என அர்த்தப்படும் ((Grand Prix de la Baguette de Traditional Francaise de la Ville De Paris) போட்டியில் தர்சன் செல்வராஜா முதலிடம் பெற்றுள்ளார்.
போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது… (Photo AfP)
4,000 யூரோவுடன் (சுமார் 14 இலட்சம் ரூபா) பணப்பரிசுடன், பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகைக்கு ஒரு வருடகாலத்துக்கு பகெட் பாண் விநியோகிக்கும் உரிமையும் அவருக்குப் பரிசுகளாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றி மூலம் சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் தர்ஷன் செல்வராஜா இடம்பெற்றுள்ளார்.
37 வயதான தர்ஷன் செல்வராஜா இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர். 15 வருடங்களாக பேக்கரி தொழில் ஈடுபட்டுள்ள அவர், பாரிஸின் 20 ஆம் வட்டாரத்தில் Au levain des Pyrénées எனும் பேக்கரியை நடத்தி வருகிறார்.
2023 ஆம் ஆண்டின் பாரிஸின் மிகச்சிறந்த பாண் தயாரிப்புப் போட்டி கடந்த புதன்கிழமை (10) நடைபெற்றது.
போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது… (Photo AfP)
இப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த ஏனைய 126 போட்டியாளர்களை வென்று தர்ஷன் செல்வராஜா முதலிடம் பெற்றுள்ளார். உண்மையில் 175 பேர் இதில் பங்குபற்றினர். ஆனால், 49 பேர் சமர்ப்பித்த பாணின் நீளம், எடை உரிய அளவில் இல்லாததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இப்போட்டிக்கு ஒவ்வொரு போட்டியாளரும் 2 பகெட் வகை பாண்களை சமர்ப்பிக்க வேண்டும். 55 முதல் 70 சென்ரிமீற்றர் நீளமும், 250 முதல் 300 கிராம் நிறையும், ஒரு கிலோவுக்கு 18 கிராம் என்ற அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பேக்கரி தொழிற்துறையினர், ஊடகவியலாளர்கள், முன்னாள் வெற்றியாளர்கள், 6 பாரிஸ் பொதுமக்கள் முதலானோர் அடங்கிய குழுவொன்றினால், பாணின் தயாரிப்பு, தோற்றம், சுவை, மணம், உள்ளமைப்பு முதலியன பரீட்சிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது… (Photo AfP)
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் தர்ஷன் செல்வராஜா 4 ஆம் இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வருட போட்டியில் முதலிடம் பெற்ற தகவல் அறிவிக்கப்பட்டவுடன் தர்ஷன் செல்வாராஜா அழுதே விட்டாராம்.
இது தொடர்பாக ஏஎவ்பிடம் அவர் பேசுகையில், ‘நான் அழுதேன். ஏனெனில், நாம் வெளிநாட்டவர்கள். பாரிம்பரிய பிரெஞ்சு பாண் தயாரிப்பது எப்படி என்பதை நாம் இங்கு வந்து கற்றுக்கொண்டோம். இப்பரிசை வென்றமைக்காக நான் மிக மகிழ்ச்சியடைகிறேன். எனது பாணை பிரான்ஸின் ஜனாதிபதி உட்கொள்வார் என்பது மிக மகிழ்ச்சியளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
தர்ஷன் செல்வாராஜா
1993 ஆம் ஆண்டு பிரெஞ்சு பாராளுமன்ற இயற்றிய ‘பாரம்பரிய பகெட்’ என அடையாளப்படுத்தப் படுத்தப்படும் பாண்கள். கோதுமை மா, தண்ணீர், உப்பு, ஈஸ்ட் ஆகியவற்றை மாத்திரமே பயன்படுத்தி கைகளால் தயாரிக்கப்பட வேண்டும். தயாரிக்கப்படும் இடத்திலேயே அவற்றை விற்பனை செய்ய வேண்டும்.
போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது… (Photo AfP)
பகெட் பாணுக்கு உலக மரபுரிமை அந்தஸ்தை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த வருடம் நவம்பரில் அளித்திருந்தது.
தனது பாண்களை எப்போதும் அன்புடனும், புன்னகைத்து, சிரித்து, பாடிக்கொண்டும் தயாரிப்பதாகவும் தர்ஷன் செல்வராஜா கூறியுள்ளார்.
(சேது)