தமிழக மக்களுக்கு நியாயமான கல்விக்கொள்கை கிடைக்க வேண்டும் – பேராசிரியர் ஜவகர் நேசன் விருப்பம்

99 0

தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றாமல் தமிழக மக்களுக்கு ஒரு நியாயமான கல்விக்கொள்கை கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று பேராசிரியர் ஜவகர் நேசன் கூறியுள்ளார்.

தமிழக அரசு மாநில கல்விக்கொள்கையை உருவாக்க நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தது. அக்குழு கல்விக்கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்த குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஜவகர் நேசன் உயர்நிலைக் குழு தேசிய கல்விக்கொள்கையை ஒட்டி மாநில கல்விக்கொள்கையை உருவாக்க முயற்சிப்பதாகவும் குழுவின் செயல்பாடுகள் ஜனநாயக முறையில் இல்லை என்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் தலையீடு இருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அண்மையில் உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகினார்.

அவரது குற்றச்சாட்டுகளுக்கு உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் மறுப்பு தெரிவித்து 3 நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பேராசிரியர் ஜவகர் நேசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்விக்கொள்கை உயர்நிலைக் குழுவின் தலைவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. பொய்யானவை. அடிப்படை ஆதாரமில்லாதவை. அவை எனது குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பில்லாதவை. குழுவின் தலைவர் ரகசியமாகவும், ஜனநாயக முறையில் இல்லாமலும் செயல்படுகிறார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்பதுதான் முக்கிய பிரச்சினை.

இதன் காரணமாக தேசிய கல்விக்கொள்கையை அடியொற்றியும் பெருநிறுவனங்கள் மற்றும் தனியார்மயத்தை மையப்படுத்தியும் மாநில கல்விக்கொள்கை தயாராகி வருகிறது. இந்த செயல் தமிழக அரசின் அரசாணையில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் எதிர்மாறாக அமைந்துள்ளது. இதுதான் குழுவில் இருந்து நான் வெளியேறியதற்கு முக்கிய காரணம். கமிட்டியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட முடிவுகளுக்கும், செயல் திட்டங்களுக்கும் எதிராக குழுவின் தலைவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

துணை கமிட்டி அமைப்பு தொடர்பாக என் மீது குழுவின் தலைவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. தமிழக மக்களின் விருப்பங்கள் மாநில கல்விக்கொள்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், உயர்நிலைக் குழுவின் செயல்பாடு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்து வருகிறது. இதை என்னால் முடிந்த அளவுக்கு எதிர்த்தேன். இதற்காக நான் கொடுத்த விலைதான் உறுப்பினர் பதவியில் இருந்து விலகல். எனது பதவி விலகலுக்குப் பிறகு, மாநில கல்விக்கொள்கை தேசிய கல்விக்கொள்கையை ஒட்டி அமைந்திருக்காது என்ற உறுதியை குழுவின் தலைவர் அளித்துள்ளார் என கருதுகிறேன். அவர் இந்த உறுதிமொழியை காப்பார் என்று நம்புகிறேன். தமிழக மக்களுக்கு ஒரு நியாயமான கல்விக்கொள்கை கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.