ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் திடீரென உள்வாங்கிய கடல் – தரை தட்டி நின்ற நாட்டுப் படகுகள்

107 0

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் பாம்பன் பகுதிகளில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியதால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த மீனவப் படகுகள் தரை தட்டி நின்றன.

வங்கக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ‘மொக்கா’ புயல், இன்று (மே 14) பகலில் தென்கிழக்கு வங்கதேசம்- வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால், ராமேசுவரம் பகுதியில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளில் கடல் நீர் சாலைக்கு வந்தது.

அதேசமயம், ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரைப் பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியது. இதனால், கடலுக்கு அடியில் உள்ள பாசிகள், புற்கள், பாறைகள் மற்றும் கடலுக்குள் போடப்பட்ட சுவாமி சிலைகள் அனைத்தும் வெளியே தெரிந்தன. மேலும், ஏராளமான பக்தர்கள் நீராடும் அக்னி தீர்த்தக் கடற்கரை திடீரென உள்வாங்கியதால், பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.

இதேபோல், பாம்பன் வடக்குக் கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கியதால், அங்கு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி நின்றன.