நெல்லியடியில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடுமையான காயங்களை விளைவிக்கும் வகையில் 54 வயது குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி, அதன் காணொளியை டிக்டொக் செயலியில் வெளியிட்டு, தலைமறைவான 8 பேரும் நேற்றிரவு (12) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களான 8 பேரும் தாக்குதல் நடத்திவிட்டு கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையிலேயே காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்டகால முரண்பாடு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் 54 வயதான குடும்பத்தலைவர் மீது கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்தும் காணொளிப் பதிவானது தாக்குதல் நடத்துபவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டு டிக்டொக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அப்போது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே நேற்றிரவு சந்தேக நபர்களான 8 பேரை கைதுசெய்துள்ளனர்.
அதன் பின்னர், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
இந்தக் கும்பலுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும், கூலிக்கு பணத்தை பெற்று வன்முறைச் சம்பவங்களில் இவர்கள் ஈடுபடுவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதான 8 சந்தேக நபர்களும் இன்று (13) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.